india

img

சாமானியனோ, சாமியாரோ... பொய் சொன்னால் அறை விழும்..... உ.பி. முதல்வரை துணிச்சலாக எச்சரித்த நடிகர் சித்தார்த்....

புதுதில்லி:
கொரோனாவின் 2-ஆவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவிவரும் நிலையில், இதனை கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பாஜக ஆளும் மாநிலங்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றன.குறிப்பாக, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் போதிய ஆக்சிஜன் வசதியோ, மருத்துவ வசதியோ கிடைக்காமல் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்துவருகின்றனர். ஆனால், உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கும் பாஜக முதல்வர்கள், தங்கள் மாநிலத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறி, கொரோனாகோரத்தை மூடிமறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மைகளைச் சொல்லும் அரசு அதிகாரிகளை அவர்கள் மிரட்டுவதிலும் இறங்கியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதனை மறுத்து, ‘உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது துளியும் இல்லை; மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள்வைத்துள்ளது’ என்று அந்த மாநிலத்தின்சாமியார் முதல்வர் ஆதித்யநாத், அப்பட்டமாக பொய் கூறியதுடன், ‘ஆக்சிஜன்பற்றாக்குறை என்று தவறான தகவல்களை தரும் மருத்துவமனைகள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் பயமுறுத்தி இருந்தார். இந்நிலையில், ஆதித்யநாத்தின் அந்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டி, கருத்து ஒன்றைப்பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், ‘ஒழுக்கமான மனிதராக இருந்தாலும்... துறவியாக இருந்தாலும்... அல்லது தலைவராக இருந்தாலும்... யாராக இருந்தாலும் சரி, பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி ஒரு அறை விழும்!’ என்று கூறி முதல்வர் ஆதித்யநாத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்ஹர்ஷ் வர்தனை, தனது டுவிட்டர் பதிவில், டேக் செய்து ‘நீங்கள் கொரோனா போராளி அல்ல... கொரோனாவின் கூட்டாளி’ என்றும் சித்தார்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பாஜக கூடாரத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.