புதுதில்லி:
குஜராத்தில், கிராமப்புற பெண்கள் 29.2 சதவிகிதம் பேர் மட்டுமே பிளஸ் டூ படிப்பை எட்டுகின்றனர். ஆனால், கேரளாவில் அந்த வயதில் 93.6 சதவிகித பெண்கள் பிளஸ் டூ செல்கிறார்கள். இந்த புள்ளிவிவரங்களை ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு வெளியிட்டுள்ளது.
கிராமப்புற குஜராத்தில், 97.3 சதவிகித பெண்கள் ஆரம்பக் கல்வியில் சேர்கின்றனர், ஆனால் அவர்களில் கால் பகுதியினர் மட்டுமே பிளஸ் டூவை அடைகிறார்கள். கேரளாவில், 99.4 சதவிகித பெண்கள் ஆரம்பக் கல்வியிலும், 93.6 சதவீதம் பெண்கள் பிளஸ் டூவிலும் சேர்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களின் கல்வியிலும் குஜராத் மிகவும் பின்தங்கியிருக்கிறது. 45 சதவிகிதம் ஆண்கள் மட்டுமே பிளஸ் டூவில் படிக்கிறார்கள். கேரளாவில் இது 90.8 சதவிகிதமாகும். பீகார், கர்நாடகா மற்றும் அசாம் மாநிலங்களும் கிராமப்புற சிறுமிகளின் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளன.
சிறுமிகள் கல்வி கற்பதற்காக பாஜக அரசு 2015 ஆம் ஆண்டில் ‘பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோ’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், 2020 வரை இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.447 கோடியில், ரூ.325 கோடி விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டது.