புதுதில்லி:
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்என்று வலியுறுத்தி தில்லியில் எல்லைப் பகுதிகளில்போராடும் விவசாயிகளுக்கு, அண்டை மாநிலங்களிலிருந்து மக்கள் தண்ணீர், உணவு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் கொண்டுவந்து கொடுப்பதைத் தடுக்கும் விதத்தில் தில்லிக் காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய இரக்கமற்ற முற்றுகையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அது கோரியிருக்கிறது.
இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்கூறியிருப்பதாவது:
இதில் மிகவும் கொடுமையான அம்சம் என்னவென்றால், தில்லி தண்ணீர் வாரியத்தின் மூலம் போராடும் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தண்ணீர் டாங்குகள் அந்த இடங்களுக்கு வராமல் நிறுத்தப்பட்டுவிட்டன. தில்லி அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு கார்ப்பரேஷனான தில்லி தண்ணீர் வாரியம் (Delhi Jal Board)இந்தக் கொடுமையான செயலைச் செய்திருக்கிறது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சுற்றுப்புறச் சூழல்கள் மிகவும் சுத்தமாகஇருக்க வேண்டிய அவசியத்தின் காரணமாக ஏற்படுத்தப்பட்டிருந்த கழிப்பிடங்களும் இதர சுகாதார வசதிகளும் தில்லிக் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன. தில்லி மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசாங்கம் தன் சொந்தஇடத்திலிருந்து தன் கடமையைச் செய்யத் தடுத்திருப்பது சட்டவிரோதமாகும்.போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பிடிவாதமான முறையில் ஏற்கமறுத்திடும் அதே சமயத்தில், மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிடும் தில்லிக் காவல்துறை, விவசாயிகளைப் பட்டினி போட வேண்டும் என்பதற்காக, இத்தகைய மனிதாபிமானமற்ற இரக்கமற்ற நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதன்மூலம் போராட்டத்தை சீர் குலைத்து, சிதறடித்திடலாம் என எண்ணுகிறது.
இத்தகைய இழிநடவடிக்கைகள் மூலமாக விவசாயிகளைப் பணிய வைத்திட முடியாது என்றுபோராடும் விவசாயிகள் பிரகடனம் செய்திருக்கிறார்கள். போராட்டத்தில் நாள்தோறும் விவசாயிகள் பெரும் எண்ணிக்கையில் சேர்ந்து அதனைஉருக்குப் போன்று உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.மத்திய அரசு இத்தகைய மனிதாபிமானமற்ற அரக்கத்தனமான நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. போராட்டம் நடைபெறும் இடங்களில் தண்ணீர், உணவு, சுகாதார வசதிகள் மற்றும்இதர அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவது தில்லிக் காவல்துறையால் தடுக்கப்படக் கூடாது. இத்தகைய நடவடிக்கைகளை தில்லிக் காவல்துறை கைவிடுவதற்கு, மத்திய அரசாங்கம், உடனடியாக உத்தரவிட வேண்டும். அதன் மூலம் மனிதாபிமானமற்ற முற்றுகையைக் கைவிட வேண்டும்.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.(ந.நி.)