india

img

இந்திய தடுப்பூசிகளை மக்களுக்கு முழுமையாக பயன்படுத்துக... வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்திடுக.... சிபிஎம் எம்.பி., டாக்டர் வி.சிவதாசன் வலியுறுத்தல்....

புதுதில்லி:
நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட, ஒன்றிய அரசு உரிய  நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டும் என்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை நாட்டு  மக்களுக்கு முழுமையாக பயன்படுத்திட முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் கோரினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் சிறப்பு நேரத்தில் டாக்டர் சிவதாசன் பேசியதாவது: 

நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளநிலைமைகள் மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கு, நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும். தற்போது நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். பல மாநிலங்களில் தடுப்பூசிகள் போதுமான அளவிற்கு இல்லாமல் பற்றாக்குறை நீடிக்கிறது. இது தடுப்பூசி செலுத்தப்படுவதைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிட்-19 தடுப்பூசிகளை முதலில் இந்தியாவில் உள்ள மக்களுக்கு முழுமையாகப் பயன்படுத்திட முன்னுரிமை அளித்திட வேண்டும். இப்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள் மட்டும் நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் செலுத்துவதற்குப் போதுமானவை யல்ல. எனவே, வெளிநாடுகளிலிருந்தும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்திட வேண்டும்.இந்தப் பிரச்சனையானது நாட்டின்கோடானுகோடி மக்களைப் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சனையாக இருப்பதால் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை களை எடுத்திட வேண்டும்.இவ்வாறு அவர்  கூறினார். (ந.நி.)