புதுதில்லி:
தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்த குழந்தைக்கு உரிமை உண்டு என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்தினால் எதிர்காலத்தில் சிக்கல்கள் நேருமா என்பது தொடர்பான வழக்கின் விசாரணை தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் , என் கட்சிக்காரரின் மகள் மைனர். ஆனால், அவரது ஆவணங்களில் என் கட்சிக்காரரின் மனைவி பெயர் இனிஷியலாக மாற்றப்பட்டுள்ளது. இது, எதிர்காலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்ந்த விவகாரங்களில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா? என கேட்டார்.அவரது வாதத்தை நிராகரித்த நீதிபதி ரேகா பாலி, “ஒரு குழந்தை தன் விருப்பப்படி தந்தைஅல்லது தாய் பெயரை இனிஷியலாக பயன்படுத்த உரிமை உள்ளது. தேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளிச் சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம்”என தீர்ப்பளித்து, மனுவை தள்ளுபடி செய்தார்.
*****************
கல்வி நிறுவனங்களில் மாணவரின் பெயருடன் தாயாரின் பெயரைச் சேர்ப்பதற்கு வசதி : ஒன்றிய அரசு
பல்கலைக்கழகங்கள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்ஆகிய கல்வி நிறுவனங்களில் மாணவர்களுடைய பெயருடன் தாயாரின் பெயரையும் சேர்ப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார்.விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மக்களவையில் எழுப்பிய கேள்வியில், ‘பிறப்பு சான்றிதழிலும், அரசின் இதர ஆவணங்களிலும் உரியவரின் பெயருக்கும், தந்தையின் பெயருக்கும் இடையில் தாயாரின் பெயரை சேர்ப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு அரசிடம் திட்டம் உள்ளதா? அரசாங்க நடவடிக்கைகளில் ஆணாதிக்கத்தை ஒழிப்பதற்கு மகளிர் நல அமைச்சகத்தின் சார்பில்எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?’என்று கேட்டிருந்தார்.
இதற்கு ஒன்றிய பெண்கள் - குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிஅளித்த எழுத்துப்பூர்வ பதிலில், பிறப்புச் சான்றிதழ்களிலும் அரசாங்கத்தின் இதர ஆவணங்களிலும் தாயாரின் பெயரை ஒருவரின் பெயரோடு சேர்ப்பது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது ஒரு குடிமகனின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததாகும். அரசாங்க நடவடிக்கைகளில் ஆணாதிக்கத்தை ஒழிப்பதற்காக அரசாங்கம்பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் சட்டம் 1969-இன் கீழ், பிறப்பை பதிவு செய்யும் விண்ணப்பத்தில் தாயாரின் பெயரை பதிவு செய்வதற்கும், தாயாரின் ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.பல்கலைக்கழகங்கள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆகியவற்றில் மாணவர்களுடைய பெயரை பதிவுசெய்யும்போது தந்தையின் பெயரோடு தாயாரின் பெயரையும் சேர்ப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.