india

img

பெங்களூருவில் 107 மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர்.... ஆய்வில் தகவல்....

புதுதில்லி:
பெங்களூருவில் 107 மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர் என்றும் இந்தியாவில் அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் பெங்களூரு என்றும்  ஆய்வில் தெரியவந்துள்ளது.

ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மூத்த ஆய்வாளர் ஷாமிகா ரவி, இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் முடித் கபூர் ஆகியோர் இணைந்து இந்தியாவில் அதிக மொழிகள் பேசப்படும் நகரம் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், ‘‘2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் அதிகமான மொழிகள் பேசப்படும் மாவட்டம் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு என்பதும்  அங்கு மொத்தமாக 107 மொழிகளை பேசும் மக்கள் வாழ்கின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளை பேசும் மக்களும், 85 அட்டவணையில் இடம்பெறாத மொழிகளை பேசும் மக்களும் அடங்குவர். அதிகபட்சமாக கர்நாடக மாநில அலுவலக மொழியான கன்னடம் பேசப்படுகிறது.
பெங்களூருவில் 44.62 சதவீத மக்கள் கன்னடம் பேசுகின்றனர். தமிழ் (15 சதவீதம்), தெலுங்கு (14 சதவீதம்), உருது (12சதவீதம்), இந்தி (6 சதவீதம்), மலையாளம் (3 சதவீதம்), மராத்தி (2சதவீதம்), கொங்கனி (0.6 சதவீதம்) உட்பட வேறுமொழிகளை சேர்ந்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

அரியலூரில் 20 மொழிகள் 
பெங்களூருவுக்கு அடுத்த இடத்தில் நாகாலாந்தின் திமாபூர் மாவட்டத்தில் 103 மொழிகளும், அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் 101 மொழிகளும் பேசப்படுகின்றன. குறைந்தபட்சமாக தமிழகத்தில் உள்ள‌ அரியலூர், புதுச்சேரியில் உள்ள‌ ஏனாம், உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் தேஹத் உள்ளிட்ட மாவட்டங்களில் 20க்கும் குறைவான மொழிகளே பேசப்படுகின்றன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆய்வாளர் ஷாமிகா ரவி தெரிவிக்கையில், “பெங்களூருவில் அதிக மொழி பேசும் மக்கள் வாழ்வதற்கு வரலாறு, பருவநிலை மற்றும் பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. 1960-களில் பொதுத்துறை நிறுவனங்களும், 1990-களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தொடங்கப்பட்ட பின்னர் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மொழிகளை சேர்ந்த மக்கள் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தனர். இதனால் பெங்களூரு பன்மைத்துவம் பெற்ற நகரமாக மாறியது’’என்று தெரிவித்துள்ளார்.