புதுதில்லி:
விவசாயிகளின் மரணம் வீண் போகாது, எங்கள் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்று புதுதில்லி, சிங்கூ எல்லையில் போராடிவரும் விவசாயிகள் கோபத்துடன் தெரிவித்தார்கள். பஞ்சாபியரின் லோஹ்ரி பண்டிகை நாளன்று விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எரித்திடவும் இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள்.
“போராட்டக் களத்தில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துவிட்டார்கள். இது வீண் போகாது. நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம். அரசாங்கம், எங்களுக்கு எதிராகக் கூட்டங்களைக் கூட்டி, எங்களின்பொறுமையை சோதித்துக் கொண்டிருக் கிறது. அவர்களுடைய கூட்டங்களின் வாயிலாக எதுவும் நடக்கப்போவதில்லை,” என்றுஜாஸ் கிரன் என்னும் விவசாயி கூறினார்.லூதியானாவில் உள்ள தன்னுடைய கிராமத்திலிருந்து நடந்தே போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்துள்ள சுக்வீந்தர் சிங், போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து வரும் சம்பவங்களை சமூக ஊடகங்களில் பார்த்தபின், தான் தன் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருப்பதாகத் தெரிவித்தார். வரும் வழியில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்ததாக அவர் தெரிவித்தார். அவர்கள் அனைவருமே இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள் என்று அவர் தெரிவித்தார்.“எங்களை காலிஸ்தானிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று கூறி இழிவுபடுத்தும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் இத்தகைய முயற்சிகள் படுதோல்வியடைந்துவிட்டன. ஜனவரி 26 அன்று நாங்கள் அணிவகுப்பு நடத்திடவுள்ளோம். புத்தாண்டு நிச்சயம் விவசாயிகளுக்கு புது நம்பிக்கைகளை உருவாக்கிடும்,” என்று லக்விந்தர் பால் என்னும் விவசாயி கூறினார். (ந.நி.)
படக்குறிப்பு : முன்னாள் ராணுவ வீரர்கள் சிங்கூ எல்லையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டார்கள்