india

img

ஆயுத உற்பத்தியிலும் இறங்குகிறார் அதானி... சிறியரக துப்பாக்கிகள், வெடிமருந்து உற்பத்தி.....

புதுதில்லி:
சுரங்கம், மின்சாரம், எரிவாயு, விமான நிலையங்கள், துறைமுகம், வேளாண் வர்த்தகம், சொகுசுக் கப்பல்கள் இயக்கம் என்று அனைத்து தொழில்களையும் ஏகபோகமாக கைப்பற்றும் முயற்சியில் பிரதமர் மோடியின் நண்பரான அதானி ஈடுபட்டுள்ளார்.அந்த வகையில், புதிதாக ஆயுத உற்பத்தியிலும் ஈடுபடுவதெனவும் அதானி முடிவு செய்துஉள்ளார்.அதானி எண்டர்பிரைசர்ஸ் குழுமத்தின் கிளைநிறுவனமான அதானி லேண்டு டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் (Adani Land Defence Systems and Technologies),முதற்கட்டமாகச் சிறிய ரகத் துப்பாக்கிகளையும், வெடி மருந்துகளையும் தயாரிக்க முடிவு செய்துஉள்ளது. 

அத்துடன், ஆன்டி டிரோன் சிஸ்டம்ஸ் மற்றும் பராமரிப்பு, விமானப் பழுது நீக்கம் ஆகியவற்றையும் தனது ஆயுத உற்பத்தி திட்டத்தின் முக்கிய பகுதியாக அறிவித்துள்ளது. இதற்காக இஸ்ரேல் ஆயுத துறையுடன் உருவாக்கப்பட்ட பிஎல்ஆர் சிஸ்டம்ஸ் என்ற கூட்டணி நிறுவனத்தின் 51 சதவிகிதப் பங்குகளை அதானி எண்டர்பிரைசஸ் கைப்பற்றியுள்ளது. ஆயுத உற்பத்தி மற்றும் தயாரிப்பில் ஏற்கெனவே இயங்கிவரும் நிறுவனங்களையும் கைப்பற்றியுள்ளது.

முக்கியமாக பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘ஆல்பா டிசைன் சிஸ்டம்ஸ்’ நிறுவனத்தைக் கைப்பற்றியது. இந்நிறுவனம் இந்திய விமானப் படையில் இருக்கும் பைட்டர் (Su-30MKI) விமானங்களுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிப்பு பணிகளைச் செய்து வருகிறது எனும் நிலையில், அந்த நிறுவனத்தை அதானி வளைத்துப் போட்டுள்ளார். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தேஜஸ்போர் விமானங்களுக்கான உதிரிப் பாகங்களைத் தயாரிப்பதற்கான  ஆர்டர்களை, இந்த ஆல்பா டிசைன் சிஸ்டம்ஸ் நிறுவனம்தான் பெற்றுஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல, தற்போது இந்திய விமான நிலையங்களுக்கு மிகவும் முக்கியத் தேவையாக விளங்கும் டிரோன் எதிர்ப்பு அமைப்பு (Anti-drone system)-ஐ தயாரிக்கும் பணியிலும் அதானி லேண்டு டிபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்த டிரோன் எதிர்ப்பு அமைப்பை வைத்து, இந்தியா முழுவதும் மைக்ரோ யுஏவி மற்றும் தற்கொலை டிரோன்களைத் (suicide drones)தடுக்க முடியும். மேலும் பிஎல்ஆர் நிறுவனத்தின் கீழ் அதானி குழுமம் சமீபத்தில் கைப்பற்றிய குவாலியர் தொழிற்சாலை மூலம் பாதுகாப்புப் படைக்குத் தேவையான ஆயுதங்கள், மெஷின் துப்பாக்கிகள் (Uzi sub), லைட் மெஷின் துப்பாக்கி (Negev), டாவோரே துப்பாக்கிகளையும் தயாரிக்க உள்ளது. அதுமட்டுமல்ல, விமானப் பழுதுநீக்கம் மற்றும் பரிசோதனை பணிகளைச் செய்யவும் முடிவு செய்துள்ள அதானி குழுமம், பயணிகள் மற்றும் ராணுவ விமானங்களை இயக்கும் திட்டத்தையும் கையில் வைத்துள்ளது. இதற்கு இந்தியாவில் ஏற்கெனவே தனது கட்டுப்பாட்டில் வந்துள்ள 6 முக்கிய விமான நிலையங்கள் உதவியாக இருக்கும் என்றும் அதானி குழுமம் கணக்குப் போட்டுள்ளது.