புதுதில்லி:
அருட் தந்தை ஸ்டான் சுவாமி மீது பொய் வழக்கு புனைந்து, அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்துவைத்து துன்புறுத்திய தற்குக் காரணமானவர்களுக்கு எதிராக “உங்கள்அரசாங்கம்” நடவடிக்கை எடுத்திட உங்கள் தலையீடு தேவை என்று குடியரசுத் தலைவரை, நாட்டிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அருட் தந்தை ஸ்டான் சுவாமி சிறையில் நிறுவனரீதியாகக் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் து.ராஜா, தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் எச்.டி.தேவகவுடா, ஜம்மு-காஷ்மீர் மக்கள் கூட்டணித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி யுள்ளனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்ப தாவது:இந்தியாவில் உள்ள பெரிய எதிர்க்கட்சி களின் தலைவர்களாகிய நாங்கள் அருட் தந்தை ஸ்டான் சுவாமி சிறையில் மரணம் அடைந்திருப்பதன் காரணமாக எங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆழ்ந்த துக்கத்தையும், சீற்றத்தையும் மிகவும் வேதனையுடன் வெளிப்படுத்தும் விதத்தில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறோம்.
84 வயதான கிறிஸ்தவப் பாதிரியாரும், சமூகச்செயற்பாட்டாளருமான ஸ்டான் சுவாமி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளிலும் வாழ்ந்துவந்த பழங்குடியினர் பிரச்சனைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் பாடுபட்டு வந்தவர். கடந்த அக்டோபரில் பொய்க் குற்றச்சாட்டுகளைப் புனைந்து, மிகவும் அரக்கத்தன மான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, பீமா கோரேகான் வழக்குடன் பிணைத்து சிறையில் அடைக்கப் பட்டார்.அவர் பார்கின்சன் என்னும் நடுக்குவாதம் உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகிஅவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவற்றுக்குமுறையான சிகிச்சை அவருக்கு மறுக்கப்பட்டது. இத்தகைய அக்கிரமங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட பின்னர்தான் அவர் நீராகாரம் குடிப்பதற்கு அவசியத்தேவையான உறிஞ்சுகுழாய் (sipper) அவருக்கு அளிக்கப்பட்டது.
மிகவும் நெரிசல்மிக்க டலோஜா சிறையில் அவர் வைக்கப்பட்டிருந்தார். கோவிட்-19கொரோனா வைரஸ் தொற்றால் அவர் பாதிக்கப்படக்கூடும் என்பதற்காக அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று எண்ணற்ற வேண்டுகோள்கள் விடுக்கப் பட்டன. எனினும் அவை அனைத்து கண்டுகொள்ளப்படவில்லை. பிணையில் விடுவிக்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் என்ற அவருடைய வேண்டுகோள்களும் நிராகரிக்கப்பட்டன. அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, உடல்நிலை சீர்கேடுஅடைந்துகொண்டிருந்தபொழுது, மும்பை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக (இதற்காக நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்) அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். ஆனாலும் சிறையில் அவர் மரணத்தைத்தடுக்க முடியாத அளவிற்கு அது தாமதமாகி விட்டது.
நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற முறையில் , ஸ்டான் சுவாமி மீது பொய் வழக்குகள் புனைந்து, அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்துவைத்து மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தியதற்குக் காரணமானவர் களுக்கு எதிராக “உங்கள் அரசாங்கம்” நடவடிக்கை எடுத்திட உங்கள் தலையீடு தேவை என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அவர்கள் மக்கள் மத்தியில் பதில் சொல்லியாக வேண்டும்.இதேபோன்று பீமா கோரேகான் வழக்கில் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற அனைவரும் மற்றும் அரக்கத்தனமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம்,தேசத் துரோகக் குற்றப்பிரிவு முதலான வற்றை துஷ்பிரயோகம் செய்து, அரசியல்ரீதியாகக் கைது செய்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடி யாக விடுதலை செய்திட வேண்டியதும் அவசியமாகும்.இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளனர்.