புதுதில்லி:
நாடு முழுவதும் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் மே 1ம் தேதி தொடங்குகிறது. இதில், தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள், மத்திய அரசின் ‘கோ-வின்’ இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டது.
இதன்படி, புதனன்று மாலை 4 மணிக்கு இந்த முன்பதிவு தொடங்கியது. ஆனால், இணையதளம் திறக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நிமிடத்துக்கும் நாடு முழுவதிலும் இருந்து தலா27 லட்சம் பேர் முன்பதிவு செய்ய முயன்றதால், கோ-வின்இணையதளம் செயல்படாமல் முடங்கியது. இதன் காரணமாக, முன்பதிவு செய்ய முயன்ற மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.கோ-வின் இணையதள முகவரியுடன் இணைப்பதற்காக மத்திய அரசின் ஆரோக்கிய சேது, உமாங் ஆகிய ஆப்களும் செயல்படாமல் முடங்கின. முன்பதிவு செய்தவர்களுக்கு ஓடிபி எண்கள் குறிப்பிட்ட செல்போனுக்கு வருவதற்கு தாமதமானது. அந்த எண்ணை பதிவு செய்தபோது, அது நிராகரிக்கப்பட்டது. இதனால், பெரியளவில் குழப்பங்கள் ஏற்பட்டன. சேவை தொடங்கிய 3 மணி நேரத்தில் 80 லட்சம்பேர் இதில் முன் பதிவு செய்தனர்.