india

img

84 நாடுகளுக்கு 6.45 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி...

புதுதில்லி:
84 நாடுகளுக்கு 6.45 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகின்றது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் அமைச்சர்கள்  பங்கேற்ற 24வது உயர்மட்டக்குழு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்  ஹர்ஷவர்தன் பேசுகையில்,  நாட்டில் கொரோனாவில் இருந்து இதுவரை மொத்தம் 1 கோடியே 19 லட்சத்து 13 ஆயிரத்து 292 பேர் குணமடைந்துள்ளனர்.  கடந்த 3 மாதங்களில் குணமடைந்தோர் விகிதம் 96-97 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. ஆனால், இந்த விகிதம் 91.22 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், கடந்த 7 நாட்களாக 149 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை. கடந்த 14 நாட்களாக 8 மாவட்டங்களிலும், கடந்த 21 நாட்களாக 3 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புகள் காணப்படவில்லை. கடந்த 28 நாட்களாக 63 மாவட்டங்களில் ஒரு நபருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்தார். 

மேலும் கூறுகையில், சுகாதாரப் பணியாளர்களில் 89 லட்சம் பேர் முதல் டோசும், 54 லட்சம் பேர்இரண்டாவது டோசும் பெற்றுள்ளனர்.  முன்களப் பணியாளர்களில் 98 லட்சம் பேர் முதல் டோசும், 45 லட்சம் பேர் இரண்டாவது டோசும் பெற்றுள்ளனர்.  45 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களில் 2.62 கோடி பேர் முதல் டோசும், 5 லட்சத்து 23 ஆயிரத்து 268 பேர் 2வது டோசும் பெற்று உள்ளனர்.  60 வயதுக்கு மேற்பட்டோரில் 3.75 கோடி பேர் முதல் டோசும், 13 லட்சம் பேர் இரண்டாவது டோசும் பெற்று உள்ளனர். இதுவரை 84 நாடுகளுக்கு 6.45 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஏற்றுமதிசெய்யப்பட்டுள்ளன.  அவற்றில் 1.05 கோடி தடுப்பூசி டோஸ்கள் 44 நாடுகளுக்கு மானிய அடிப்படையிலும், 3.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் 25 நாடுகளுக்கு வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையிலும் மற்றும் 1.82 கோடி தடுப்பூசி டோஸ்கள் 39 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் வசதியின் அடிப்படையிலும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.