புதுதில்லி:
இந்தியாவில் மும்பை, அகமதாபாத், மங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 7 விமான நிலையங்கள், அதிகளவிலான பயணிகள் வந்து செல்லும் விமானநிலையங்களாக உள்ளன.
மொத்தம் 34.10 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். 2019-20 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், மும்பையில் மட்டும் சுமார் 7.9 கோடி பயணிகள் வந்துசென்றுள்ளனர். இவற்றைத் தவிர முந்திரா விமான நிலையம் 2018 ஆம் ஆண்டு முதல் பயணிகள் விமானங்களுக்குத் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட அனைத்து விமான நிலைய பராமரிப்புப் பணிகளும் தனியார்மயமாக்கப் பட்டு, அவை இந்தியாவின் பெருமுதலாளிகளில் ஒருவரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான அதானியின் ‘அதானி எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்துக்கு (Adani Enterprises) வழங்கப்பட்டுள்ளன. நவி மும்பை பசுமை விமானநிலைய பராமரிப்புப் பணி ஒப்பந்தமும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், இந்த 6 விமான நிலையங்களையும் அதானிக்கு கொடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன, என்று முன்பு கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய நிதியமைச்சகம் மற்றும் நிதிஆயோக் ஆகிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரி வித்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இந்த விமானத்தளங்கள் அனைத்துமே முக்கியமான மற்றும் நாட்டின் முதலீடுகளில் ஒன்று என கருதப்படுவதால் ஒரே நிறுவனத்துக்கு (அதானிக்கு மட்டுமே) 6 விமான நிலையங்களையும் வழங்குவது தவறு என்றுநிதி அமைச்சகத்தின் (Finance Ministry) பொருளாதார விவகாரத் துறை (Department of Economic Affairs) இரண்டாண்டுகளுக்கு முன்பே எச்சரித்துள்ளது.கடந்த 2018 டிசம்பர் 11 அன்றுதான் அகமதாபாத், மங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகியவற்றைத் தனியார்மயமாக்கு வதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. அதற்கு ஒருநாள் முன்னதாக- அதாவது 2018 டிசம்பர் 10 அன்று, பொருளாதார விவகாரங்கள் துறையின் இந்த அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களுக்கு முன்புஒப்பந்தப்புள்ளி அளித்திட்டபோது, ஒரே நிறுவனத்துக்கு அளிக்கப்படவில்லை என்பதும், அப்போது தில்லி மின் விநியோக திட்டத்துக்கு ஒரே நிறுவனத்தைத் தேர்வு செய்யாமல் இரு நிறுவனங்களுக்கு பணிகள் பகிர்ந்து வழங்கப்பட்டது என்பதும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
ஆனால் 2018-ஆம் ஆண்டின் ஒப்பந்தப்புள்ளி குறித்த விவாதத்தின் போது பொருளாதார விவகாரத்துறையின் எச்சரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதே நாளில், நிதி ஆயோக் (Niti Aayog) அமைப்பும்தனது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது. போதுமான தொழில்நுட்ப திறன் இல்லாதவராக ஏலதாரர் இருக்கும்போது அது பராமரிப்பை வெகுவாக பாதிக்கக்கூடும்; மேலும் ஒரே நிறுவனத்திற்கே அனைத்துப் பணிகளையும் வழங்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தினர் சேவைகளின் தரத்தில் சமரசம் செய்துகொள்ளவும் வாய்ப்பு உள்ளது என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. ஆனால்,நிதி ஆயோக்கின் எதிர்ப்பையும் மத்திய அரசின் ஆலோசகர்கள் புறந்தள்ளியுள்ளனர்.அதுமட்டுமல்ல, அதானிக்கு விமான நிலையங்களைக் கொடுப்பதற்கு தடையாக இருக்கிறார் என்ற அடிப்படையில் அன்றைய நிதி அமைச்சக செயலாளராகஇருந்த சுபாஷ் சந்திர கார்க், 2019 ஜூலையில் இடமாற்றம் செய்யப்பட்டார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளன.
சுபாஷ் சந்திர கார்க் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகே, 2020 பிப்ரவரியில் அகமதாபாத், மங்களூரு மற்றும் லக்னோ விமான நிலையங்கள் என ஆரம்பித்து, வரிசையாக ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் என 6 விமான நிலையங்களும் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.இதில் இன்னொரு சலுகையும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அது என்னவெனில், இதற்கு முன்பு தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை தனியார் மயமாக்கியபோது, அதிகபட்சம் 30 ஆண்டுகளுக்கு மட்டுமே ஒப்பந்தம்வழங்கப்பட்டது. ஆனால், அதானிக்கு தற்போது 50 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு மோடி அரசு தனது கார்ப்பரேட் விசுவாசத்தைக் காப்பாற்றுவதற்காக செய்த பல்வேறு தகிடு தத்தங்களும் தற்போது அம்பலமாகி இருக்கின்றன.இதில் குறிப்பிட வேண்டிய, இன்னொரு முக்கியமான விஷயம் 3 விமான நிலையங்களின் பராமரிப்புப் பணிகளை அதானி நிறுவனம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. கொரோனா காரணமாக விமானங்கள் சரிவர இயக்கப்படாததால், இப்போதே விமான நிலையங்களை தன்வசம் கொண்டுவந்தால் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியது வரும் என்று தொடர்ந்து தள்ளிப்போட்டு வருகிறது.