புதுதில்லி:
பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து அரசு மருத்துவமனைகளில் 550 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் 2-வது அலையால்இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தில்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையால் நோயாளிகளும் உயிரிழந்தனர். ஆக்சிஜன் வழங்கக்கோரி பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தியும் மத்திய பாஜக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாகவே இருந்தது. மோடி அரசின் இந்த போக்கிற்கு மக்கள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. பிச்சை எடுத்தாவது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்குங்கள் என்று தில்லி உயர்நீதிமன்றம் கோபமாக மோடி அரசின் தலையில் குட்டு வைத்த பிறகே சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பிஎம் கேர்ஸ் மூலம் புதிதாக 550 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அரசு மருத்துவமனைகளில் அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அரசு மருத்துவமனைகளில் 550 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதற்காக பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து நிதி ஒதுக்கவும் முறையான ஒப்புதல் அளி்க்கப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை விரைவாக அமைத்து, விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் மூலம் மாவட்ட அளவில் ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கச் செய்ய முடியும். பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். இதற்கான கொள்முதல் பணிகளை மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் கவனிக்கும்.
இதற்கு முன் ரூ.201.58 கோடி மதிப்பில் 162 பிஎஸ்ஏ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிஎம் கேர்ஸ் நிதி ஒதுக்கீடு செய்தது. இதேபோன்ற மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையங்கள்தான் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை களில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுகாதாரத்துறை வலுப்பெறும், நாட்டில்ஆக்சிஜன் உற்பத்தியும் அதிகரிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.