புதுதில்லி:
ஜூலை மாதத்திற்குள் 51.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும்என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்களு டன் ஹர்ஷ வர்தன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, தொற்று வேகமாக பரவுவதற்கான காரணங்கள், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஹர்ஷ வர்தன் பேசியதாவது:
நாட்டில் கொரோனா தடுப்பு மருந்துகளின் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 18 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. ஜூலை இறுதிக்குள் 51.6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும். ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசிக்கும் தற்போது அனுமதி கிடைத்திருக்கிறது. எனவே, தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் எழுவதற்கு வாய்ப்பில்லை.குஜராத்தை பொறுத்தவரை கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. குணமடைவோரின் விகிதமும் 79 சதவீத மாகவே உள்ளது. தேசிய அளவில் குண மடைவோரின் விகிதத்தை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு ஆகும். குஜராத்தின் அகமதாபாத், வதோதரா உள்ளிட்ட நகரங்களில் ஐசியு படுக்கைகளுக்கும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதேபோல, ஆந்திரா, உத்தரப்பிர தேசம், மத்திய பிரதேச மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதுடன், உயிர்காக்கும் மருத்துவ உபகரணங் களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு தீர்வுகாண மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.