புதுதில்லி:
5 மாநிலத் தேர்தலோடு சேர்த்து, நாடு முழுவதும் 13 மாநிலங்களுக்கு உட்பட்ட 12 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 4 மக்களவைத் தொகுதிகளுக் கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில், பாஜக-வுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 5 சட்டமன்றத்தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன. எஞ்சிய அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.ஆந்திர மாநிலம், திருப்பதி மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மடிலா குருமூர்த்தி, தன்னை அடுத்துவந்த தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் பனபாக லட்சுமியை 2 லட்சத்து 71 ஆயிரம்வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். பாஜக வேட்பாளரும் கர்நாடக முன்னாள் தலைமைச் செயலாளருமான ரத்னபிரபாவுக்கு 56 ஆயிரத்து 992 வாக்குகளே கிடைத்தது.
கேரள மாநிலம் மலப்புரம் மக்களவைத் தொகுதியில், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் அப்துஸ்மத் சமதானி வெற்றிபெற்றார். சிபிஎம் வேட்பாளர் வி.வி, சானுவைக் காட்டிலும் 1 லட்சத்து 14 ஆயிரம் வாக்குகளைஅவர் அதிகம் பெற்றார். பாஜக வேட்பாளர் அப்துல்லா குட்டி இங்கு 67 ஆயிரம்வாக்குகளைப் பெற்றார்.கர்நாடக மாநிலம் பெல்காம் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் வெறும் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே பாஜகதப்பிப் பிழைத்தது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்திடம், பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் 1 லட்சத் திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.சட்டப்பேரவை இடைத் தேர்தல்களைப் பொறுத்தவரை, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மூன்று இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 2 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக ஓரிடம் பெற்றது. பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில், பசவகல்யாண் சட்டமன்றத் தொகுதியை பாஜக வென்ற நிலையில், மஸ்கி தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டது.தெலுங்கானாவின் நாகர்ஜூன சாகர் சட்டப்பேரவைத் தொகுதியை ஆளும் டிஆர்எஸ் கட்சி கைப்பற்றியது.
குஜராத் மாநிலம் மோர்வா ஹதாப்(எஸ்.டி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும், உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும் பாஜகவென்றது.பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின், தாமோ தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் பண்டார்பூர்-மங்கல்வேத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது.
மிசோரத்தில், ஒரு தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் முன்னணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓரிடத்திற்கு நடந்த தேர்தலில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வென்றது. நாகாலாந்தில், தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்டிபிபி) வேட்பாளர் எச்.சுபா சாங் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.