புதுதில்லி:
வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மேலும் 25 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் புதனன்று அறிவித்தன . கொரோனா தொற்று காலத்தில் மக்கள் அவதிப்படும் நிலையில் இந்த விலை உயர்வு சுமையை அதிகரித்துள்ளது. ஆனால் மக்களைப் பற்றி கவலைப்படாத மோடி அரசு, இதிலும் அதேநிலையுடன் உள்ளதாக கொந்தளிப்புடன் கூறுகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு 14.2 கிலோ எடை கொண்டசிலிண்டர் ரூ.410.50 ஆக இருந்தது. மோடி அரசில் ரூ.900ஆக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 17 அன்றுதான் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இரு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாகசிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப் பட்டுள்ளது.வர்த்தகரீதியான சிலிண்டர் விலையும் ரூ.75 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான வீட்டு உபயோக சிலிண்ட ரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.610-ல் இருந்து ரூ.660 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து சிலிண்டர் விலைதொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த இரு வாரங்களில் ரூ.50 அதிகரித்துள்ளது. இதன்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.884.50 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக எரிவாயு சிலிண்டர் விலைஉயர்த்தப்பட்டு தற்போது தமிழகத்தில் ரூ.900 வரை விற்கப்படுகிறது.சமையல் சிலிண்டர் மீதான விலையை ஒவ்வொரு மாதமும் உயர்த்துவதன் மூலம் மானியத்தை முற்றிலுமாக ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் மானியம் நிறுத்தப்பட்டுவிட்டது.
“சமையல் எரிவாயு விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டில் மட்டும் ரூ.285 உயர்வு. அதாவது ஆண்டுக்கு ரூ. 4 ஆயிரம் சுமை. பெட்ரோலிய வரி உயர்வில் ரூ.3லட்சம் கோடி ஒவ்வொரு ஆண்டும் சுரண்டுகிறார்கள். இந்த ஆட்சியின் முடிவில் மக்கள் தான் ரூ.15 லட்சம், மோடி அரசுக்கு செலுத்தியிருப்பார்கள் போலும்?!
கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)