புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடையில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் பரவல் காரணமாகப் பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், புதுச்சேரியில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கக்கோரி, ஜெகன்நாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு தாக்கத்திலிருந்து மீண்டுவரும் நிலையில், அடிப்படை கள நிலவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளதாகவும், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் குவிந்து வருவதால், அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடையில்லை எனவும், அதேசமயம் டிசம்பர் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபான விற்பனைக்குத் தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். பொது இடங்கள், பார்கள், விடுதிகளில் மது விற்கவும், அருந்தவும் தடை விதித்தும் உத்தரவிட்டனர். அதேபோல் பிரபலங்கள் பொது இடங்களில் பங்கேற்கக்கூடாது, தனி இடங்களில் பங்கேற்றுக்கொள்ளலாம் என்றும், தங்கும் விடுதிகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் தங்கிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.