india

img

குலாப் புயல் : வெள்ளத்தில் மிதக்கும் கிருஷ்ணா, ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள்

குலாப் புயல் எதிரொலியாக ஆந்திராவின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் கிருஷ்ணா, ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 

ஒடிசாவையும் ஆந்திராவையும் மிரட்டிய குலாப் புயல் கரையைக் கடந்து வலுவிழந்து மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்த பிறகும், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதிகளில் மழை தொடர்ந்து நீடிப்பதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், பல மணி நேரமாக நீர் வடியாததால் மக்கள் அன்றாடப் பணிகளை முடிக்க முடியாமல் அவதிக்கு ஆளாகினர். லாவேரு, ரணஸ்தல, சிகடமண்டல் போன்ற பகுதிகளில் விளைந்த பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே அணை திறக்கப்பட்டதால், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றியமைக்கப்பட்டது.இடுப்பளவுக்கும் மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை, பலத்த காற்று காரணமாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.