india

img

டிசம்பர் 14 விவசாயிகள் தர்ணா போராட்டங்கள் : பெண்கள் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்! - அனைத்து மாதர் அமைப்புகளும் அறைகூவல்

புதுதில்லி, டிச. 13—
விவசாய சங்கங்கள் சார்பில் டிசம்பர் 14 அன்று மாவட்ட அளவில் நடைபெறும் தர்ணா போராட்டங்களில் பெண்களும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று அனைத்து மாதர் அமைப்புகளும் அறைகூவல் விடுத்துள்ளன.
இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்தியப் பெண்கள் தேசிய சம்மேளனம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கம் மற்றும் பல சங்கங்கள் சார்பில் அதன் பொதுச் செயலாளர்கள் முறையே மரியம் தாவ்லே, அனி ராஜா, கவிதா கிருஷ்ணன் மற்றும் பலர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, விவசாயிகள் மாவட்ட அளவில் டிசம்பர் 14 அன்று தர்ணா போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளனர். அந்தப் போராட்டங்களில் பெண்களும் முழுமையாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மூன்று வேளாண் சட்டங்களும், விவசாயிகளுக்கு எதிரானவை மட்டுமல்ல. நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரானவைகளாகும். இந்தச் சட்டங்கள் பொது விநியோக முறையை கைகழுவிவிடுவதோடு மட்டுமல்லாமல்,உணவுப் தட்டுப்பாட்டையும், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விலைவாசி உயர்வையும், இவற்றின் காரணமாக பசி-பட்டினிச் சாவுகள் மற்றும் ஊட்டச்சத்தின்மை ஆகியவற்றையும் ஏற்படுத்திடும். நாட்டின் ஏற்கனவே மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மை குறைபாட்டுடன் இருந்து வருகிறார்கள்.
இந்தச் சட்டங்கள் நம் நிலம் மற்றும் நீராதாரங்களையும் நாசப்படுத்திடும்.
இந்த மூன்று சட்டங்களும்  பெண்களை, விவசாயிகளாக அங்கீகரிக்கவில்லை. பண்ணை நிலங்களை சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளிடமிருந்து குறிப்பாக பெண்களிடமிருந்து பறித்துவிடுகிறது. இப்போது நாட்டில் உள்ள நிலங்களில் 12 சதவீதம்தான் பெண்களிடம் இருக்கிறது. இதுவும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
விவசாயத் தொழிலாளர்களில் 45 சதவீதமா இருக்கும் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இந்தச் சட்டங்களின்மூலம் மோடி அரசாங்கம், விவசாயிகளை கார்ப்பரேட்களின் பிச்சைக்காரர்களாக மாற்றியிருக்கிறது.
அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள், கார்ப்பரேட்கள் மேற்கொள்ளும் பதுக்கலையும், கள்ளச் சந்தையையும் சட்டபூர்வமாக்கியிருக்கிறது. அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்வதிலிருந்து நழுவிக்கொள்கிறது. இவ்வாறு அது தன் அரசமைப்புச்சட்டக் கடமையை மேற்கொள்ளாது நழுவிக்கொள்கிறது.
எனவே,
(1) மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யவும், மின் திருத்தச் சட்டமுன்வடிவை ரத்து செய்யவும் வேண்டும்.
(2) உணவுப்பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும்.
(3) வட்டார அளவில் மண்டிகள் ஏற்படுத்தி உணவுப்பொருள்களை அரசாங்கம் கொள்முதல் செய்திட வேண்டும்.
(4) தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய்களும் அரசாங்கம் கொள்முதல் செய்திட வேண்டும்.
(5) பொது விநியோக முறையில் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.
(6) பெண்களை விவசாயிகளாக அங்கீகரித்திட வேண்டும்.
இக்கோரிக்கைகளை முன்னிறுத்தி இத் தர்ணா போராட்டங்களில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்று மாதர் அமைப்புகள் தங்கள் கூட்டறிக்கையில்  தெரிவித்துள்ளன.

;