india

img

குடியுரிமை திருத்தச் சட்ட முன்வடிவு மிகவும் ஆபத்தானது: முகமது சலீம்

புதுதில்லி:
குடியுரிமை திருத்தச் சட்டமுன்வடிவு எவரும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் ஆழமானவை, ஆபத்தானவை என்றும் எனவே இது விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்த முகமது சலீம், இச்சட்டமுன்வடிவு குறித்து ஆட்சேபணைக் குறிப்பை அளித்திருந்தார்.

மத்திய அமைச்சரவை குடியுரிமை திருத்தச் சட்டமுன்வடிவை (Citizenship Amendment Bill) இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றிட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இதற்கான வரைவு சட்டமுன்வடிவு 2016இல் கொண்டுவரப்பட்ட சமயத்தில், இதனை அரசாங்கம் கூட்டு தெரிவுக்குழுவுக்கு அனுப்பவேண்டும் என்று இரு அவைகளினாலும் நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டு அவ்வாறே அனுப்பப்பட்டது. அந்த சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவுக் குழுவிற்கு ஆட்சேபணைக் குறிப்பு (dissent note) அளிக்கப்பட்டது. இந்தக் குறிப்பினை அப்போது மக்களவை உறுப்பினராக இருந்த கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான முகமதுசலீம் 2019 ஜனவரி 9 அன்று அளித்திருந்தார். அதில் கூறியிருந்த விவரங்கள் வருமாறு:

அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மாற்றப்படுகின்றன
இந்தியக் குடியுரிமை என்பது ஓர் அடிப்படை உரிமையாகும். இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் ஒரு குடியரசுமிக்க மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகும். இந்திய குடியுரிமை என்பது நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும், அவர்களின் பாலினம், சாதி, வகுப்பு, இனம், பிராந்தியம் அல்லது மொழி ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அனைவரும் சமம் என்பதை அடிப்படை உரிமைகளாக வகுத்துத் தந்திருக்கின்றன. இதனை அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள 5 முதல் 11 வரையிலான பிரிவுகள் தெள்ளத்தெளிவாக வரையறுத்திருக் கின்றன.மேலும் நமது நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் சமஸ்கிருதத்தில் இந்தியாவின் வழிகாட்டும் கொள்கையாக ஒரு வாக்கியம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதன் பொருள் என்னவெனில், “இந்தியா என்பது மத ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் யாராக இருந்தாலும், அவர்கள் யூதர்களாக இருந்தாலும், ஏமனைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும், பார்சிக்களாக இருந்தாலும், ஈரானியர்களாக இருந்தாலும், ஆப்கானியர்களாக இருந்தாலும், திபத்தியர்களாக இருந்தாலும், வங்கதேசிகளாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இதனைத் தங்கள் இல்லமாகக் (home) கருதலாம்” என்பதேயாகும்.

இது வெறும் சட்டத்திருத்தம் அல்ல, மாறாக மதவெறியர்களின் அரசியல் அறிக்கை
இந்தச் சட்டமுன்வடிவிற்குப் பின்னே ஆட்சியாளர்களின் மதவெறி சித்தாந்தம் ஒளிந்துகொண்டிருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவானது எவ்விதமான ஜனநாயக விவாதமும் இன்றி ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தின் ஆரோக்கியமான விவாதத்தையே ஒரு கேலிக்கூத்தாக இது மாற்றி இருக்கிறது.இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தியக் குடியுரிமையை ஓர் அடிப்படை உரிமையாக வழங்கியிருக்கிறது. இந்த உரிமை மதத்தின் அடிப்படையிலோ அல்லது நாட்டின் அடிப்படையிலோ இருக்க முடியாது.இந்தச் சட்டத்திருத்தமானது நாட்டில் நிலவும் பிரச்சனைகள் எதற்கும் தீர்வுகளை அளித்திடாது. மாறாக, மேலும் அதிக அளவில் பிரச்சனைகளையே உருவாக்கிடும். இது, மக்களுக்கும், மொழிகளுக்கும் இடையே பிளவினையும் சந்தேகத்தினையுமே அதிகரித்திடும்.  இதில்உள்ள திருத்தமானது, ஒருவரின் குடியுரிமை யை மொழியின் அடிப்படையிலும், மதத்தின்அடிப்படையிலும் தீர்மானித்திட வேண்டும் என்கிறது. உண்மையில், இது ஆர்எஸ்எஸ்இயக்கத்தின் சித்தாந்தத்தை நிறைவேற்றக் கூடியது. இதன்மூலம் அது, நாடு பிளவுண்ட போது இந்தியாவை ஓர் இந்து நாடாக மாற்ற வேண்டுமென்கிற அவர்களின் நிறைவேறாதநிகழ்ச்சிநிரலை இப்போது நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கிற முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்தியாவும் இந்தியத் துணைக் கண்டமும் மதப் பிரிவினைகளால் ஏற்கனவே பேரழிவினை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சட்டத்திருத்தம் நாட்டின் பல மாநிலங்களில் மேலும் பல பேரழிவுகளைக் கொண்டுவரும். 1983இல் அஸ்ஸாமில் வங்க முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோன்று இந்தியாவின் பிற பகுதிகளும் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாயின.இந்தச் சட்டத் திருத்தமானது அண்டை நாடுகளில் வசிக்கும் அனைத்து இந்துக்களுக்கும் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறது. அதேசமயத்தில் இங்கேயுள்ள முஸ்லீம்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் அல்லது மிகவும் பரிதாபகரமான முறையில் தடுப்புக்காவல் முகாம்களில் இருத்தி வைக்கப்படுவார்கள், அல்லது பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தி மனிதாபிமான மற்ற முறையில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப் படுவார்கள் என்கிற அச்சுறுத்தலையும் கொண்டிருக்கிறது.

இந்தியா இந்து நாடாக மாறவில்லையே என எரிச்சல்
நாடு சுதந்திரம் அடைந்து இரு நாடுகளாகப் பிளவுபட்டபோது, இந்தியா இந்து நாடாக மாறாது,மதச்சார்பற்ற குடியரசாக மாறியதில் இன்றைய ஆட்சியாளர்களுக்கு மகிழ்ச்சி கிடையாது.இன்றையதினம் உள்ள அரசமைப்புச்சட்டத் தின்படி இந்தியா, பாகிஸ்தானிலிருந்தோ அல்லது வங்க தேசத்திலிருந்தோ வந்தவர்களில் இந்து – முஸ்லீம்களுக்கு இடையே  எவ்விதமான பாகுபாட்டையும் பார்க்கவில்லை. இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத்திருத்தமானது இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் இந்து – முஸ்லீம்களுக்கிடையே பாகுபாட்டை உருவாக்க வேண்டும் என்பதே அதன் உண்மையான குறிக்கோளாகும்.2014ஆம் ஆண்டு பாஜகவின் தேர்தல்அறிக்கையில், “இந்தியா அவதிக்குள்ளாகியிருக் கும் இந்துக்கள் அனைவருக்கும் இயற்கை யான இல்லமாகும். எனவே அவர்கள் இங்கே  அடைக்கலமாக வரவேற்கப்படுவார்கள்” என்று கொடூரமான முறையில் குறிப்பிட்டிருந்தது. இதேபோன்று உலகில் வேறொரு நாடு மட்டும் தான் தன் கொள்கையைக் கூறியிருக்கிறது. இஸ்ரேல்தான் அந்த நாடு.  அதுதான் உலகில் உள்ள யூதர்கள் அனைவரும் தங்கள் நாட்டிற்கு எவ்விதமான நிபந்தனையுமின்றி தாமாகவே வரலாம், குடியுரிமையைப் பெறலாம் என்று கூறியிருந்தது.பாஜக தன்னுடைய 2014 தேர்தல் அறிக்கையில் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரை மிகவும் பாராட்டி, அவர்கள் நாட்டின் நலன்களுக்குப் பெரிய அளவில் பங்களிக்க வேண்டும் என்று கூறியிருந்ததையும் பார்த்தோம்.  இதில் உள்ள பாசாங்குத்தனம் வெள்ளிடைமலை. இவ்வாறு வெளிநாடுகளில் இந்தியர்கள் வாழ்வதும், இந்திய வம்சாவளியினர் வாழ்வதும் அந்த நாடுகளின் குடிமக்களுக்கு இருந்துவரும் குடியேற்றக் கொள்கை மிகவும் தாராளமாக இருப்பதே காரணமாகும். உண்மையில் இவ்வாறுபாஜக கவலைப்படுவது, வெளிநாடுகளில் வாழும் மத்தியதர மற்றும் உயர்வகுப்பு நபர்கள் குறித்துத்தானே யொழிய, உலகம் முழுதும் பாடுபட்டுக்கொண்டிருக்கிற அடிமட்ட இந்தியத் தொழிலாளர்களைப் பற்றியல்ல. 

இப்போது, பாஜக, 2019இல் இந்தியக் குடியுரிமைச் சட்டங்களையே மாற்றி அமைத்திட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், இத்தகைய மாற்றங்கள் நாட்டின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப்பற்றியோ, இந்தியத் துணைக் கண்டத்திலும் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப்பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாமல் இச்சட்டத் திருத்தத்தைச் செய்ய முன்வந்திருக்கிறது.  இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரும் சமத்துவத்துடனான குடிமக்கள் என்கிறஅந்தஸ்தை அளித்துத்தான் இந்திய அரசமைப்புச்சட்டம் இரு நாட்டுக் கொள்கையை (two-nationtheory) நிராகரித்து, மதச்சார்பின்மைக் கொள்கையை உயர்த்திப்பிடித்தது.இப்போது பாஜக கொண்டுவர முயலும் சட்டத்திருத்தம் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் மத்தியில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்ல, வங்க தேசத்தில் வாழும் இந்துக்கள், காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மேற்கொண்ட வரலாற்றுச்சிறப்புமிக்க நிலைப்பாட்டின் நம்பகத்தன்மையையுமே பாதிப்புக்கு உட்படுத்தும். (ந.நி)
 

;