india

img

ஆசிப் கொலை வழக்கு மற்றும் மதவெறி மகாபஞ்சாயத்து கிரிமினல்களைக் கைது செய்திட வேண்டும் – பிருந்தா காரத் ஹர்யானா முதல்வருக்குக் கடிதம்

புதுதில்லி, ஜூன் 11, ஹர்யானா மாநிலத்தில் ஆசிப் என்னும் இளைஞர் கொலைசெய்யப்பட்ட வழக்கிலும், அங்கே மதவெறி “இந்து மகாபஞ்சாயத்து” நடத்தியவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், பிருந்தா காரத்,  ஹர்யானா முதல்வர் கட்டார் அவர்களைக் கோரியுள்ளார்.

 

இது தொடர்பாக பிருந்தா காரத், ஹர்யானா முதல்வர் கட்டாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியிருப்பதாவது:

நான் இந்தக் கடிதத்தை, ஹர்யானா மாநிலம், நூஹ் என்னும் மாவட்டத்தில் கேரா காலிப்பூர் என்னும் கிராமத்தில் மே 16 அன்று மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட ஆசிப் என்னும் இளைஞரின் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் ஜூன் 9 அன்று சந்தித்ததைத் தொடர்ந்து எழுதுகிறேன். அன்றையதினம் நாங்கள் காவல் ஆணையர் சக்தி சிங் என்பவரையும் சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம்.

 

இவ்வாறு சென்ற தூதுக்குழுவில் என்னுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் ஏஐடியுசி பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹர்யானா மாநில செயலாளர் சுரீந்தர் சிங், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹர்யானா மாநில செயலாளர் தரியாவ் சிங் காஷ்யப் முதலானவர்கள் இடம்பெற்றிருந்தோம்.

 

இது தொடர்பாக நாங்கள் உங்கள் கவனத்திற்குக் கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டுவந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

மேற்படி கிராமத்தில் ஆசிப் என்னும் 28 வயது இளைஞர் மே 16 அன்று கிரிமினல் குண்டர்களால் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கிராமத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எவ்விதமான சாதி, மத வேறுபாடுமின்றி ஆசிப் உதவி வந்ததோடு, அக்கிராமத்தில் நடைபெற்ற கிரிமினல் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாகவே கிரிமினல் பேர்வழிகள் இவரைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். இக்கொலைபுரிந்த கிரிமினல்களுக்கு எதிராக ஏராளமான கிரிமினல் வழக்குகள் ஏற்கனவே இங்கேயுள்ள காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.

 

இக்கொலை சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் காவல்துறையினர் நன்கு செயல்பட்டிருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட 12 பேரைக் கைது செய்தனர். இது ஆசிப் குடும்பத்தினரிடம் சற்றே நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.

 

இருப்பினும், மே 30க்குப்பின் நிலைமைகள் மாறியுள்ளன. இங்கே அரசுத்தரப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவையும் மீறி, இந்ரி என்னும் கிராமத்தில் “இந்து மகாபஞ்சாயத்து” என்னும் பெயரில் ஒரு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கர்னி சேனா என்னும் அமைப்பின் தலைவராக இருக்கும் சூரஜ் பால் அம்மு என்பவர் தலைமை வகித்திருக்கிறார். ஆயிரக்கணக்கானோர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்நிகழ்வு குறித்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், “முதலில் மதத்தைப் பாதுகாப்போம். இதைத் தொடர்ந்து தாமாகவே சாதிகளும் காப்பாற்றப்படும்” (“First save religion. Castes will automatically be saved”) என்று வெளியிடப்பட்டிருக்கிறது.  நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு மதச்சாயம் பூசும் முயற்சி என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.  ‘இந்து மகாபஞ்சாயத்தில்’ உரையாற்றிய அனைவரும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் விதத்தில் வெறுப்புப் பேச்சுக்கள் எனும் விஷத்தை உமிழ்ந்துள்ளார்கள், ஆசிப் கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி இருக்கிறார்கள், அவ்வழக்கு தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி இருக்கிறார்கள். அவர்களின் நோக்கம், குற்றஞ்சாட்டப்பட்ட கிரிமினல்களைக் காப்பாற்றுவதற்காக மதவெறி அடிப்படையில் மக்களை அணிதிரட்ட வேண்டும் என்பதேயாகும். இதன்மூலம் நிகழ்வை மதவெறியுடன் இணைத்து அங்கே மதப்பதற்றத்தைப் பரப்ப வேண்டும் என்பதும், மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்த வேண்டும் என்பதுமேயாகும். இவை அனைத்துமே நம் சட்டத்தின்கீழ் குற்றங்களாகும்.

 

இங்கே உரையாற்றியவர்களில் நரேஷ் குமார் என்பவர், ஜூனைத் கொலை வழக்கில் பிரதானமாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபராவார். அவர் அந்த வழக்கில் பிணையில் வெளிவந்துள்ளார். இந்த நபர்தான் இவ்வாறு வெறித்தனமாகப் பேசி இருக்கிறார். மகாபஞ்சாயத்தில், ஆளும் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்களும் இடம்பெற்றிருந்தார்கள்.

 

மகாபஞ்சாயத்தின் நோக்கம் மதவெறியுடன் அமைந்திருந்ததைக் கண்டிப்பதற்குப் பதிலாக, உள்ளூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் கோரிக்கைகள் மக்களின் உரிமைகள் என நியாயப்படுத்தி இருக்கிறார். மக்கள் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர் இக்கூட்டத்தைக் கண்டித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு அவர் மறுத்திருக்கிறார். இது இங்கேயுள்ள சிறுபான்மை மக்கள் மத்தியில் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மகாபஞ்சாயத்து நடந்தபின் அடுத்த ஒருசில தினங்களிலேயே, கைது செய்யப் பட்டிருந்தவர்களில் நால்வர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். “மகாபஞ்சாயத்தின்” கோரிக்கை இவ்வாறு நிறைவேற்றப்பட்டிருப்பது தெளிவாகி இருக்கிறது.

 

144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது “மகாபஞ்சாயத்து” நடத்த எப்படி அனுமதி அளிக்கப்பட்டது? இரண்டாவதாக, அங்கே வெறுப்பை உமிழ்ந்த எவரும் கைது செய்யப்படாதது, ஏன்? மூன்றாவதாக, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷ் குமாரை பிணையில் விடுவிக்க வேண்டும்  என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தின்மீது காவல்துறையினர் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை? கொலை சம்பவம் தொடர்பாக கண்ணால் கண்ட சாட்சி சாட்சியம் அளித்திருந்தும் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரைக் காவல்துறையினர் ஏன் விடுவித்தார்கள்? கொலை சம்பவத்தில் 24 பேர்களுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தும் அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை?

 

இந்தப் பிரச்சனைகள் அனைத்தின்மீதும் தாங்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எடுப்பீர்கள் என நம்புகிறேன்.  அதாவது கொலைக் குற்றத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், “இந்து மகாபஞ்சாயத்து” நடத்திய அனைவரையும், அங்கே வெறுப்பு விஷத்தை உமிழ்ந்த அனைத்துப் பேர்வழிகளையும் கைது செய்திட வேண்டும், ஜூனைத் வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட நரேஷ் பிணை ரத்து செய்யப்பட வேண்டும்.

 

கொலை செய்யப்பட்ட  ஆசிப் 28 வயது இளைஞர். அவருக்கு ஒரு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள். ஒரு குழந்தைப் பிறந்து ஒருசில மாதங்களே ஆகின்றன. அவர் குடும்பத்தினருக்கு உரிய நிதி இழப்பீடு வழங்கிட வேண்டும். இவ்வாறு பிருந்தா காரத் கடிதத்தில் கோரியுள்ளார்.

(ந.நி.)

;