india

img

காலத்தை வென்றவர்கள் : தோழர் எம்.பசவபுன்னையா பிறந்த நாள்...

இந்தியாவின் தலைசிறந்த மார்க்சிய தத்துவ அறிஞர்களில் ஒருவரும் ஆந்திர மாநிலத்தின் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வித்திட்டவர்களுள் ஒருவருமான தோழர் எம்.பசவ புன்னையா 1904 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் பிறந்தார்.

1934 ஆம் ஆண்டு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். 1934 -35 காலகட்டங்களில் கம்யூனிஸ்ட் தலைவர் சுந்தரய்யாவுடன் தொடர்புகொண்டு 1935 ஆம் ஆண்டின் துவக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆனார். பின்னர் படிப்பைக் கைவிட்டு முழுக்க முழுக்க சுதந்திரப் போராட்டத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பதிலும் முன் நின்றார்.அதே 1935ஆம் ஆண்டில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் குண்டூர் மாவட்டக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் அவர்1840 ஆம் ஆண்டு வரை இருந்தார். 1946 ஆம் ஆண்டில் மகத்தான தெலுங்கான ஆயுதப் போராட்டத்தில் பசவபுன்னையா முக்கியப் பங்கு வகித்தார்.

1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த பசவபுன்னையா தனது பணியுடன் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களுக்குக் கட்சியின் நிலைமை, அடக்கு முறையை எவ்வாறு சந்திப்பது,எவ்வாறு மக்கள் இயக்கங்களை முன் கொண்டு செல்வது போன்றவை குறித்து வகுப்புகள் நடத்தினார்.1951 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐந்து ஆண்டுகால தலை மறைவிற்குப் பின் வெளிவந்தார். 1952 ஆம் ஆண்டில் சென்னை சட்டமன்றத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசவபுன்னையா சுமார் 14 ஆண்டு காலம் அந்த அவையின் உறுப்பினராக செயல்பட்டார். 1964 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அவர் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தன் இறுதிநாள் வரை செயல்பட்டார்.

1964ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை அவர் பாதுகாப்புக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் 1975 ஆம் ஆண்டில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பொழுது பல மாதங்கள் பாதுகாப்புக் கைதியாக சிறையில் இருந்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆங்கில வார ஏடான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ ஏட்டின் ஆசிரியராக 13 ஆண்டு காலம் செயல்பட்டார்.இந்திய நாட்டின் அரசியல் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்ந்து பல ஆவணங்கள் எழுதியுள்ளார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அவருடைய தத்துவார்த்த பங்களிப்பானது அளவற்றது. பலமுறை இருதய நோயால் பாதிக்கப்பட்ட பசவபுன்னையா 1992 ஆம் ஆண்டு ஏப்ரல்12ல் மாரடைப்பால் உயிர் நீத்தார்.

===-பெரணமல்லூர் சேகரன்===