india

img

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்... ராஷ்டிரிய லோக் தந்த்ரிக் கட்சி அறிவிப்பு...

புதுதில்லி:
மத்திய பாஜக அரசு, வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்ளாவிட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று ராஜஸ்தான் மாநிலத்தில் இயங்கிடும் ராஷ்டிரிய லோக் தந்த்ரிக் கட்சி அறிவித்துள்ளது.தேசிய ஜனநாயகக் கட்டணியில் அங்கம் வகித்த சிரோன்மணி அகாலி தளம் கூட்டணியை முறித்துக்கொண்டதை அடுத்து இப்போது ராஷ்டிரிய லோக்தந்த்ரிக்கட்சியும் பாஜக-விற்கு நிர்ப்பந்தம் அளித்துக் கொண்டிருக்கிறது. இக்கட்சியின் தலைவரும் நாகர் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுமான் பெனிவால், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 

அதில், வேளாண் சட்டங்கள் அனைத்தும் விவசாயிகளின் நலன்களுக்கானது அல்ல என்று தெளிவாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டு, இவற்றை  உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.மக்களுக்கு உணவு அளிக்கும் உழவர்கள், தில்லியின் கடுங் குளிரைத் தாங்கிக் கொண்டும், கொரோனா வைரஸ் தொற்றைப்பொருட்படுத்தாதும், கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், மத்திய அரசு, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் அமல்படுத்திடவும் வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.

ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாட் இனத்தினர் மத்தியில் கணிசமான செல்வாக்கு உண்டு. மக்களவையில் ஒருவரையும், மாநில சட்டமன்றத்தில் மூவரையும் இக்கட்சிஉறுப்பினர்களாகக் கொண்டிருக் கிறது.(ந.நி.)