india

img

இன்று பாரத் பந்த்.... வேளாண் சட்டங்களை ரத்து செய்க... மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்....

புதுதில்லி:
டிசம்பர் 8 அன்று நடைபெறும் ‘பாரத் பந்த்’திற்கு அகில இந்திய அளவில் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின், தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின்தலைவர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர், குப்கார் கூட்டணியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரத பிஸ்வாஸ் மற்றும் புரட்சிசோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:“

இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள நாங்கள், பல்வேறு விவசாய சங்கங்களின் சார்பில் மகத்தான முறையில் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு எங்களுடைய பேராதரவைத் தெரிவித்துக்கொள்ளும் விதத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், மின்சார திருத்தச் சட்டமுன்வடிவைத் திரும்பப் பெறவலியுறுத்தியும் விவசாய சங்கங்களால் விடுக்கப்பட்டுள்ள டிசம்பர் 8– பாரத் பந்த்திற்கான அறைகூவ லை முழுமையாக ஆதரிக்கிறோம்.   இந்தியாவின் உணவுப்பாதுகாப்பை ஆபத்திற்குள்ளாக்கக் கூடிய விதத்திலும், இந்தியாவின் விவசாயத்தையும் இந்திய விவசாயிகளையும் அழிக்கக்கூடிய விதத்திலும், விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒழித்துக்கட்டி, அதன்மூலம் இந்திய விவசாயத்தையும் நம்முடைய சந்தைகளையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வேளாண் வர்த்தகக் கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைத்திடும் விதத்திலும், ஜனநாயக விரோத மாக மிகவும் வெட்ககரமானமுறை யில், இந்திய நாடாளுமன்றத்தில் உரியவிவாதம் மற்றும் வாக்கெடுப்பு இல்லாமல், இந்தப் புதிய வேளாண்சட்டங்கள்  நிறைவேற்றப்பட்டிருக் கின்றன.மத்திய அரசாங்கம், ஜனநாயக நடைமுறை விதிகளைக் கடைப்பிடித்திட வேண்டும்,  நமக்கு உணவு அளித்திடும் உழவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்திட வேண்டும்.”இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள் ளார்கள். (ந.நி.)