india

img

விவசாயிகளுக்கு போக்குவரத்து ஊழியர்கள், பேராசிரியர்கள் ஆதரவு....

புதுதில்லி:
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ‘விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்று’ என்று வலியுறுத்தி, அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் சம்மேளனம் மற்றும் ‘அய்ஃபக்டோ’ எனப்படும் அகில இந்தியப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் ஆகியவை தங்கள் முழுமையான ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவித்துள்ளன.

அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் சம்மேளனம், கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களையும், மின்சாரத்தைத் தனியார்மயமாக்கிடும் மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவையும் எதிர்த்து வீரஞ்செறிந்தபோராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகளை வாழ்த்துகிறது, பாராட்டுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் அரசாங்கத்தால் ஏற்கப்படா விட்டால், போக்குவரத்து பந்த் மேற்கொள்ளப்படும் என்று அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவித்திருப்பதற்கும் வரவேற்பினை தெரிவிக்கிறது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலக் குழுக்களும், யூனியன் பிரதேசங்களும்  டிசம்பர் 7 அன்று போராடும் விவசாயிகளுக்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திட வேண்டும் என்று அகில இந்தியசாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கடுமையாகப் பாதித்து, ஒட்டுமொத்த மக்களையும் நிர்க்கதியாக்கிவிடும். மின்சாரத்தைத் தனியாரிடம் தாரைவார்ப்பது, நுகர்வோருக்கு பெரும் சுமையை ஏற்படுத்திடும். இவ்வாறு  விவசாயிகள் ஒட்டுமொத்த மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் சம்மேளனம், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாஜக மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கோருகிறது. இல்லையேல் ஒட்டுமொத்த போக்குவரத்தும் இயங்காது முடங்கும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அய்ஃபக்டோ
 அகில இந்தியப் பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:விவசாயிகளின் போராட்டம் நிகரற்றஒன்று. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலகம் முழுவதையும் உற்றுப்பார்க்க வைத்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நவீனதாராளமய நிகழ்ச்சிநிரல் முழுமையாகத் தோலுரிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் அம்பலமாகி இருக்கிறது.மூன்று வேளாண் சட்டங்களும் மின்சார சட்டமுன்வடிவும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் விவசாயிகள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகள் ‘அய்ஃபக்டோ’ உட்பட மத்தியத் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுமாகும்.விவசாயம் உட்பட அனைத்துத் துறைகளிலும் மத்திய அரசாங்கம் பின்பற்றும் கொள்கைகள், உலகநிதி மூலதனத்தின் சக்திகளுக்குஉறுதுணையாக  இருக்கும்விதத்திலேயே வடிவமைக்கப்பட்டி ருக்கிறது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என்று நிச்சயமாகச் சொல்லமுடியும். இவை சாமானிய மக்களின் நலன்களுக்கு எதிரானவை களாகும்.  நம் அரசமைப்புச்சட்ட மாண்புகளையும் மறுதலிக்கக் கூடியவைகளாகும். ஆயினும், போராடும் விவசாயிகளின் கவலைகளை ஜனநாயக ரீதியாக செவிமடுப்பதற்குப் பதிலாக, பிரதமர், கார்ப்பரேட்டுகளின் அடிமைகளாக சேவகம் செய்திடும் ஊடகங்களையும், அறிவு ஜீவிகளையும் பயன்படுத்திக் கொண்டு, தன் அரசாங்கத்தின் நடவடிக்கையை, வெட்கமின்றி நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்.   

‘அய்ஃபக்டோ’, போராடும் விவசாயிகளுக்குத் தன் ஒருமைப்பாட்டை உரித்தாக்கிக் கொள்கிறது. நடைபெற்றுவரும் போராட்டம் மக்கள்விரோத பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான விரிவான போராட்டமே என்றும் கருதுகிறது.‘அய்ஃபக்டோ’, சரியான மனம் கொண்ட, முற்போக்கான, ஜனநாயக மற்றும் தேசப்பற்று மிகுந்த சக்திகள் விவசாய போராட்டத்தினைச் சுற்றி அணிவகுத்திட வேண்டும் என்றும், மத்திய அரசு பின்பற்றி வரும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மரண அடியைஏற்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது. நம் நாட்டைப் பாதுகாக்க, நம் அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாக்க, மத்திய ஆட்சியாளர்களின் படுபிற்போக்குத்தனமான மற்றும் ஜனநாயகவிரோத கொள்கைகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.இவ்வாறு  அறிக்கையில் தெரிவித்துள்ளது. (ந.நி.)