புதுதில்லி:
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லையில் போராடி வரும் விவசாயிகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் , அமைப்புகள், தொழிலாளர்கள், வாலிபர், மாணவர்,மாதர் இயக்கங்கள் ஆதரவுதெரிவித்துள்ளன. இப்போராட்டம் மேலும் பல பகுதிகளில் பரவி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநிலப் பொருளாளர் தீபா,மாநில இணைச் செயலாளர் பாலச்சந்திர போஸ் ஆகியோர் பிப்ரவரி 3 ஆம் தேதியன்று தில்லி மாநில திக்ரி எல்லை
யில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் போராட்டக்களத்தில் அமைத்திருந்த மேடையில் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா பேசியதாவது:
செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள் என்று மகாகவி பாரதி சொல்லுவான். அப்படி பேசுகின்ற மொழி எதுவாக இருந்தாலும் விவசாய விரோத சட்டங்களை மோடி அரசாங்கம் குப்பையில் தூக்கி எறியும் வரை இந்திய நாடு முழுவதும் போராடும் விவசாயிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று இந்நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி பாடினான்.ஆனால் இன்றைக்கு இந்திய நாட்டின்130 கோடி மக்களுடைய உணவு சந்தையை அதானிக்கும், அம்பானிக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மோடி அரசாங்கம் அடகு வைத்திருக்கிறது. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் என்று பாரதி பாடினான். அப்படி கேடுகெட்ட ஒரு கூட்டம், இந்த தேசத்தின்விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்த கூட்டம் தில்லியில் உள்ள அதிகாரத்தை வைத்து இந்த நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகளை உறிஞ்சிகொழுக்க அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தியாவையே எடுத்துக்கொடுக்கும் நிலைமையையே உருவாக்குகிறார்கள்.
அப்படிப்பட்ட நிலைமையை மாவீரன் பகத்சிங் வழி வந்த இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம் அனுமதிக்காது. ஏனென்றால் நாம்சாப்பிடக்கூடிய உணவு என்பது அத்தியாவசியமானது. நாம் உடையில்லாமல் வாழ முடியும்; ஆனால் உலகில் யாராலும் உணவில்லாமல் வாழ முடியாது. சோற்றில் உப்புபோட்டு சாப்பிடும் அனைவரும் சாதி கடந்து, மதம் கடந்து, மொழிகடந்து, இனம் கடந்து ஆதரிக்கும் போராட்டம்தான் இந்த விவசாயிகள் போராட்டம். இந்திய நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதோடு, இந்த போராட்டம் வெற்றி பெறும், வெல்லட்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மனப்பூர்வமான, புரட்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.