புதுதில்லி:
போராடிவரும் விவசாயிகளின் குரலைக் கேளுங்கள், அவர்களின் மீதானஅடக்குமுறையை நிறுத்துங்கள் என்று இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் மற்றும்திமுக, தேசியவாதக் காங்கிரஸ், ராஷ்டிரியஜனதா தளத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் து. ராஜா, திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச் சார்யா, புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகிலஇந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரத பிஸ்வாஸ், ராஷ்டிரிய ஜனதா தள மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா ஆகியோர் கையெழுத்திட்டு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடும் அடக்குமுறை, கண்ணீர்ப்புகை குண்டுகள், வாட்டர் கேனன்கள் மூலமாக குளிர்ந்த நீரைப் பீய்ச்சி அடித்தல்,காவல்துறையினரின் தடுப்பு அரண்கள்என அரசாங்கம், போராடும் விவசாயிகள் மீது ஏவிய அனைத்து அடக்குமுறைகளையும் விவசாயிகள் துணிவுடன் எதிர்கொண்டு, படுபிற்போக்குத்தனமான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், 2020 மின்சார சட்டமுன்வடிவை ரத்து செய்திட வேண்டும்என்றும் வலியுறுத்தி பல்லாயிரக்கணக் கான விவசாயிகள் உறுதியுடன் குரல் கொடுத்துக் கொண்டு, தில்லியை வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்களின் உறுதிக்கும், துணிச்சலுக்கும் நாங்கள் வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.மத்திய அரசாங்கம், விவசாயிகளை தில்லிக்குள் நுழையவிட அனுமதிக்க மாட்டோம் என்றும், அவர்களைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் பிடிவாதமாக இருந்த நிலையை விவசாயிகளின் உறுதியான நடவடிக்கைகள் காரணமாகத் திரும்பப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் திரண்டு தங்கள் கோரிக்கைகளைக் கூறுவதற்காக ஓரிடத்தை ஒதுக்கியுள்ளது. இந்த இடம் மிகவும் சிறியதாகும். ஆயிரமாயிரமாக வந்து கொண்டிருக்கும் விவசாயிகளை அந்த இடம் தாங்காது.எனவே, இதில் கையொப்பமிட்டிருக்கக்கூடிய நாங்கள், ராம் லீலா மைதானம் அல்லது அதுபோன்று பெரிய அளவிலான மைதான ஒன்றை அவர்கள் திரள் வதற்கும், தங்கள் கோரிக்கைகளை அமைதியான முறையில் எழுப்புவதற்கும் ஒதுக்கிட வேண்டும் என்றும், அவர்கள் தங்குவதற்கும், உணவுக்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கின்றன. குறைந்தபட்ச ஆதார விலையை ஒழித்துக்கட்டியிருக்கின்றன, இந்திய வேளாண்மையையும் நமக்கு உணவு அளித்துவரும் நம் விவசாயிகளையும் அழித்து ஒழித்துவிடும் என்பதனால் எங்கள் எதிர்ப்பினை மீண்டும் தெரிவிக்கிறோம். மத்திய அரசாங்கம், ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், போராடும் விவசாயிகளின் கவலைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித் துள்ளனர். (ந.நி.)