india

img

ஹத்ராஸ் பெண் பாலியல் வன்கொலை : நால்வர் மீது சிபிஐ குற்ற அறிக்கை தாக்கல்.....

புதுதில்லி:
ஹத்ராஸ் என்னுமிடத்தில் தலித் இளம்பெண் கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தொடர்பாக, வழக்கை விசாரித்த, சிபிஐ நால்வர் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தில்லி அருகேயுள்ள, ஹத்ராஸ் என்னுமிடத்தில், தலித் இளம்பெண் சந்தீப், லவகுசா, ரவி , ராமு ஆகிய நால்வரால் செப்டம்பர் 14 அன்று கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். கடும் பாதிப்புக்குள்ளான அவர் அலிகார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து தில்லி, சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கே அவர்செப்டம்பர் 29 அன்று இறந்துவிட்டார்.இந்த வழக்கை விசாரித்த மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302 (கொலை), 376 (பாலியல் வன்புணர்வு), 376-ஏ (வன்புணர்வுக்கு உள்ளாக்கும்போது காயம் ஏற்படுத்தல் மற்றும் மரணம் விளைவித்தல்), 376-டி (கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்குதல்) மற்றும் தலித்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச் சட்டத்தின்கீழ் குற்ற அறிக்கை தாக்கல் செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.இந்த வழக்கு தொடர்பாக இதற்கு முன்பு அக்டோபர் 1 அன்று, உத்தரப்பிரதேச காவல்துறைத் தலைவர்(சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார், பாதிப்புக்கு உள்ளான பெண் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் இவர் கூறியதை நிராகரித்து இப்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருக்கிறது. (ந.நி.)