india

img

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரிக்கை குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கச் சென்ற ராகுல், பிரியங்கா கைது....

புதுதில்லி:
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் மற்றும் மக்களிடம் பெற்ற 2 கோடி கையெழுத்துக்களுடன்  டிசம்பர் 24 வியாழனன்று  குடியரசுத் தலைவரிடம் மனுகொடுக்கச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி உள்ளிட்ட மூத்தத் தலைவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

விவசாயிகளுக்கு விரோதமாகமத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளில் முற்றுகையிட்டு, பல்வேறு மாநில விவசாயிகள் கடும்குளிரையும் தாங்கிக்கொண்டு  25நாட்களுக்கும் மேலாக தொடர்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை களில் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காமல் பிடிவாதத்துடன் உள்ளது.வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி  காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் மக்கள் என 2 கோடி பேரிடம் கையொப்பங்களை பெற்றுள்ளது. இந்த கையொப்பப் படிவங்கள் மற்றும் மனுவுடன் டிசம்பர் 24 வியாழக்கிழமையன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகை அருகே உள்ள விஜய் சவுக் பகுதியிலிருந்து காங்கிரஸ் துணைத் தலைவர்  ராகுல் காந்தி தலைமையில் பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங்சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாக குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிச் சென்றனர். 

ஆனால், பேரணியாகச் செல்வதற்கு காவல்துறையினர் அனுமதியளிக்கவில்லை. காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணி செல்ல தொடர்ந்து முயன்றபோது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து கைது செய்தனர்.பின்னர்  ராகுல் காந்தி உள்ளிட்ட சிலர் மட்டும் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ராகுல்காந்தி தலைமையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளி்ட்டோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து 2 கோடி கையொப்பங்களை அளித்து, விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அகங்காரத்துடன் மத்திய அரசு: பிரியங்கா சாடல் 
இதனிடையே  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள். குடியரசுத் தலைவரைச் சந்திக்க எம்.பி.க்களுக்கு உரிமைஉண்டு, அவர்களை அனுமதிக்க வேண்டும். எங்களை அனுமதிப்பதால் என்ன சிக்கல் வரப் போகிறது. லட்சக்கணக்கான விவசாயிகளின் குரல்களை கேட்க மத்திய அரசு தயாராக இல்லை. மத்திய அரசுக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பும் இருந்தால், அவர்களை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கிறார்கள். மத்திய அரசு அகங்காரத்துடன் செயல்படுகிறது. அவர்கள் வழியில்தான் அரசியல் செய்கிறார்களேத் தவிர, விவசாயிகள் மீதும், ராணுவ வீரர்கள் மீதும் மரியாதை இல்லை. விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் தேச விரோதிகள் என முத்திரையிடுவது பாவம். விவசாயிகளின் குறைகளைக் கேட்டு, அதை தீர்த்துவைக்க வேண்டியது மத்திய அர சின் கடமை என்று தெரிவித்தார்.

விவசாயிகளை ஆதரியுங்கள்: ராகுல் 
தில்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளுக்கு மக்களும் ஆதரவுதர வேண்டும் என்று  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.விவசாயிகள் போராட்டம் குறித்து ராகுல் காந்தி வியாழக்கிழமையன்று தனது டிவிட்டரில், புதிய சட்டங்கள் விவசாயிகளை ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுவதாக ஊடகங்களே தெரி வித்துவருகின்றன. இதுபோன்ற ஒரு சோகத்தைத் தவிர்ப்பதற்காக இந்தியாவில் உள்ள விவசாயிகள் ஏராளமானோர் ஒன்றுகூடி விவசாய
எதிர்ப்பு சட்டங்களுக்கு எதிராகபோராடுகிறார்கள். இந்த சத்தியாகிரகத்தில், நமது மக்கள் அனைவரும் நாட்டின் அன்னதாதாவை (நாட்டிற்கு உணவளிப்போன்) ஆதரிக்க வேண்டும் என்று தெரி வித்துள்ளார்.