ஹைதராபாத்:
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த‘மின்சார திருத்தச்சட்டம் -2020’ தெலுங்கானா மாநிலத்தில் அதன்வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது.புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களிட மிருந்து, மாநிலங்கள் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை கட்டாயமாக கொள்முதல் செய்தே ஆக வேண்டும் என்பது, ‘மின்சாரத் திருத்தச் சட்டம் 2020’-இன் மிக முக்கியமான விதி என்று கூறப்படுகிறது. அந்த மாநிலம் மின்மிகை மாநிலமாக இருந்தாலும், தன்னுடைய உற்பத்தி
யைக் குறைத்துக் கொண்டு, தனியாரிடம் மின்சாரம் வாங்க வேண்டும்.
இந்தச் சட்டம், அதானி போன்ற தனியார் பெருமுதலாளிகளுக்கு ஆதரவானது என்று அப்போதே கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. எனினும், கடந்த 2020 ஏப்ரல் 17 அன்று இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தி யது.இந்நிலையில்தான், மின்மிகை மாநிலமாக உள்ள தெலுங்கானா மாநிலம் தற்போது அதானியிடமிருந்து சூரிய சக்தி மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.மோடி அரசு நிறைவேற்றிய சட்டத்தின்படி தனியாரிடம் மின்சாரம் வாங்கியாக வேண்டும் என்றாலும், அந்த தனியார் நிறுவனங்களையும் மோடி அரசுதான்கைகாட்டும். மின்சார ஒப்பந்த அமலாக்கத் துறை எனும் மத்திய அரசு அமைத்துள்ள துறை பரிந்துரைக்கும் நபர்களிடம் இருந்து மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் வாங்க முடியும்.இதன்படி, மத்திய அரசின் ஒப்புதலோடு செயல்படும் அதானி நிறுவனத்திடம் மட்டுமே மின்சாரத்தை பெற முடியும்.
தெலுங்கானா போன்ற மாநிலங்கள், இதர மின் தேவைகளுக்காக தனியாரிட மிருந்து அதிகப்பட்சமாக 7 சதவிகிதம் அளவிற்கே மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வரம்பு வைத்துள்ளன. மோடி அரசு இந்த வரம்பையும் உடைத்து, அதனை 19 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.இவற்றின் காரணமாக, மின்மிகை மாநிலமாக விளங்கினாலும், அதானி நிறுவனத்திடமிருந்து 19 சதவிகித அளவிற்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் தெலுங்கானா மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.தெலுங்கானாவில் 45 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 8 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அதானி குழுமத்திற்கு இதுவரை வாடிக்கையாளர்கள் என்று யாரும் இல்லை. அதானியின் மின்னுற்பத்தி நிலையம், தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளதால், மோடி அரசின் மின்சாரத் திருத்தச்சட்டப்படி, தெலுங்கானா அரசுதான் அதானிக்கு பலியாடாகி இருக்கிறது.அதுமட்டுமல்ல, குறித்த காலக்கெடுவுக்குள் அதானியிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யாவிட்டால் அபராதமும் தெலுங்கானா அரசு செலுத்த வேண்டும்.
அதாவது, கொள்முதலைத் தாமதிக்கும் ஒவ்வொரு ஆண்டும், முதல் ஆண்டில் யூனிட் ஒன்றுக்கு 0.50 பைசா அபராதமும், இரண்டாம் ஆண்டு யூனிட் ஒன்றுக்கு ரூ. 1-ம், அதற்கடுத்த ஆண்டுகளில் ரூ. 2-ம் அபராதமாக செலுத்த வேண்டும்.மாநில அரசின் மொத்த மின்சாரத் தேவையில் 19 சதவிகிதத்தை தனியாரிடமிருந்து பெறவேண்டிய சூழ்நிலையில், பெரும் தொகையை அபராதமாக செலுத்த விரும்பாத தெலுங்கானா அரசு, அபராதம் செலுத்துவதற்குப் பதில் மின்சாரத்தையே வாங்கிக் கொள்வோம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.2014-இல் மின்சார பற்றாக்குறை மாநிலமாக தெலுங்கானா இருந்த நிலையில், ஏராளமான நீர் மின் உற்பத்தி, அனல்மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம், கடந்த 6 ஆண்டுகளில் மின்மிகை மாநிலமாக மாறியது. தற்போது அதானியிடம் மின்சாரம் வாங்க வேண்டும் என்பதற்காக, தன்னுடைய உற்பத்தியை குறைக்கவும், சில இடங்களில் அரசு மின்னுற்பத்தித் திட்டங்களை இழுத்து மூடவும் வேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டுள்ளது.மேலும், மோடி அரசின் சட்டத்தால், அரசு கஜானாவிலிருந்து ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாயை அதானிக்கு கொட்டியழ வேண்டிய சூழலுக்கு தெலுங் கானா அரசு தள்ளப்பட்டுள்ளது.