ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது ட்விட்டர் தளத்திற்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் முதல் ட்விட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறது என்று தகவல் வந்தது. இந்த சூழலில் தற்போது அது உறுதியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என மூன்று சமூக வலைதளங்களை தன்வசம் வைத்துள்ளது.இந்த மூன்றும் உலகளவில் அதிகமான பயனர்களை கொண்ட செயலிகளாகும்.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் ட்விட்டரில் தளத்தில் அதிரடி மாற்றங்களை முன்னெடுத்தார். ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளு டிக்கிற்கு கட்டணம் என பல மாற்றங்களை கொண்டு வந்தார்.இந்நிலையில், அண்மையில் ட்விட்டர் பயனர்கள் ட்வீட்களை பார்ப்பதற்கு புதிய வரம்பு ஒன்றும் நிர்ணயிக்கப்பட்டது. இது பயனர்களை விரக்தி அடைய செய்தது.
ட்விட்டருக்கு மாற்றாக சமூக வலைதளங்களை உருவாக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். கூ, ஸ்பில், ப்ளு ஸ்கை என பல செயலிகள் உள்ளன.ஆனால், முதன் முறையாக மெட்டா போன்ற பெரிய நிறுவனம் ட்விட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
த்ரெட்ஸ்:
மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுஹர்பெர்க் த்ரெட்ஸ் முயற்சியை முன்னெடுத்தார்.இந்த தளம் ட்விட்டரை போலவே முற்றிலும் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து இயங்கும் தளம் என தெரிகிறது. பயனர்கள் தங்கள் எண்ணங்களை வார்த்தைகளாக பகிரலாம். இன்ஸ்டாவை மையமாக வைத்தும் இயங்கும் இந்த புதிய தளத்தின் முன்னோட்டம் மெட்டா ஊழியர்களின் பார்வைக்கு அண்மையில் கிடைக்கப்பெற்றுள்ளது.இந்த தளத்தை பயனர்கள் இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிகிறது. வரும் 6-ஆம் தேதி த்ரெட்ஸ் அமெரிக்காவில் அறிமுகமாகிறது. அதையடுத்து, இந்தியா உட்பட உலகம் முழுவதும் 7-ஆம் தேதி த்ரெட்ஸ் அறிமுகமாக உள்ளது.