அமெரிக்கா : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு , இயந்திரம் மூலம் டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வேண்டும். இது சிரமமும், செலவும் அதிகமுள்ள சிகிச்சை முறை . இதற்கு மாற்றாக , "உயிரி-செயற்கை சிறுநீரகம்" ஒன்றை மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் சிகிச்சை செய்யும்போது, கூடுதலாக மருந்துகள் கூட நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டியதில்லை என்று தெரிவிக்கின்றனர் .
அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள "உயிரி- செயற்கை சிறுநீரகம்" , பெயருக்கேற்றாற் போல, பாதி உயிரி முறையிலும், மீதி செயற்கை முறையிலும் இயங்குகிறது. அதாவது , அசுத்த ரத்தத்தை ஒரு குழாய் மூலம் உள்வாங்கி, சுத்திகரித்து, இன்னொரு குழாய் மூலம் வெளியேற்றுகிறது. மேலும் , ரத்தத்தில் உள்ள கழிவுகளைச் சிறுநீர் பை மூலம் வெளியேற்றுகிறது.
இக்கருவியைச் சோதனை செய்தபோது நன்றாகச் செயல்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் . மேலும் , ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது முதல், ரத்தத்தில் தாது சத்துக்களைச் சமமாக வைத்திருப்பது வரை அனைத்து பணிகளையும் உயிரி- செயற்கை சிறுநீரகம் சரியாகச் செய்வது தெரியவந்துள்ளது .
இக்கருவி மூலம் மேலும் பல மனித பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.