health-and-wellness

img

காய்ச்சலும் பாட்டியின் கைப்பக்குவமும்

பேசும் காச்சக்காரம்மன் – 8

பிள்ளைக்கு காய்ச்சல் வந்தவுடன் ஊருக்கு ஒருமுறை மட்டும் வந்துபோகிற பஸ்ஸை எதிர்பார்த்து குழந்தைக்கு சோறு தண்ணீர் கூட கொடுப்பதற்கு நேரமின்றி அவசரகதியாக அதிகாலையில் அழைத்து வந்து வரிசையில் நீண்ட நேரம் பசியோடும் தாகத்தோடும் நிற்கிற குழந்தைகளை இப்போதெல்லாம் மருத்துவமனையில் அதிகமாகவே பார்க்க முடிகிறது. உடல்நிலை சரியில்லையென்றாலே அதற்கான முழு தீர்வும் மருத்துவமனையிலேதான் கிடைக்கும் என்ற நமது பொதுவான புரிதல்தான் குழந்தைகளை பெரும் பசியோடும், தாகத்தோடும் வரிசையில் நிற்க வைத்திருக்கிறது. தன் பேத்திக்கு காய்ச்சல் வந்தவுடன் ஜட்டியை மட்டும் போட்டுக் கொள்ளச் சொல்லி கோரைப்பாயை நன்கு விரித்து அவர்களுக்கு கதகதப்பாக இருக்குமாறு போர்வையையும் மேலே விரித்து அடிக்கடி நெற்றியையும் வயிற்றையுமாக தொட்டுத் தொட்டுப் பார்த்து, ஈரத்துணியை எடுத்து வாஞ்சையோடு ஒத்தி ஒத்தி எடுக்கும் பாட்டிகளோடு அவர்களின் பக்குவத்தையும் நாம் எங்கோ திருவிழாக் கூட்டத்தில் தொலைத்துவிட்டோம். அப்படி பிள்ளைக்கு ஒத்தி எடுத்துக் கொண்டிருக்கும்போதே பிள்ளைக்கு சாதாரணமான காய்ச்சலா அல்லது வீரியமானதா என்று ஈரத்துணி ஒத்தடத்திற்கு காய்ச்சல் மட்டுப்படுகிற தன்மையை வைத்தே அந்த பாட்டி புரிந்து கொள்வாள்.

பேரப் பிள்ளையோடு பேச்சுக் கொடுத்துக்  கொண்டே காய்ச்சல் தலைக்கு ஏறி அவள் ஏதும்  பிதற்றுகிறானா என்று நினைவிலிருப்பதை கூர்ந்து நோட்டமிடுவாள். பிள்ளையின் கண்ணைச் சுற்றி குழி விழுவதையும், உதட்டு வெடிப்பையும், நாக்கு வறண்டு போவதையும், தோல் செதில் செதிலாக வறட்சியடைவதையும் வைத்தே பேத்திக்கு நீர்ச்சத்து வேண்டுமா, வேண்டாமா என்பதை எளிதில் அறிந்து கொள்வாள். நீர்ச்சத்து போதவில்லை என அவளின் அனுபவக் குறிப்பு தென்பட்டவுடன் வெதுவெதுப்பான தண்ணியை கொண்டு வந்து அவளது தளர்ந்துபோன விரலால் பேத்தியின் உதட்டில் தொட்டுத் தொட்டு வைப்பாள். அப்புறமாக அவளால் முடிந்த நீராகாரத்தை அதாவது ஆற வைத்த வெந்நீர், இளநீர், சர்க்கரை-உப்புக் கரைசல், பழச்சாறு, சுக்கு-மிளகு-திப்பிலி கலந்த கசாயம் என ஏதாவது தயார் செய்து வந்து பேரப் பிள்ளையின் தலையைத் தூக்கி மடிமீது வைத்துக் கொண்டு பரிவோடு குடிக்கச் செய்வாள். காய்ச்சலால் வாய்க் கசப்பேறி குடிக்கப் பிடிக்கவில்லை என்றாலும்கூட அப்போதும் காக்கா நரி கதைகளைச் சொல்லிச் சொல்லியே அவள் குடிக்க வைத்துவிடுவாள். இப்போதுள்ள பிள்ளைகளால் அம்மாக்களைத்தான் ஏமாற்ற முடியுமே தவர அன்றைய பாட்டிகளிடம் எப்பேர்ப்பட்ட வயது வந்தவர்களானாலும் அன்பில் ஏமாந்துதான் ஆக வேண்டும். பாட்டி படிக்கவில்லையென்றாலும்கூட அவளுக்கு காய்ச்சலால் உடலின் எனர்ஜி உறிஞ்சப்பட்டு விரைவில் காலாவதியாகிவிடும் என்பது நன்றாகவே தெரியும். எனவேதான் பேத்தி சுணங்கிச் சுணங்கி விழுகிறாள், சரியாக பதிலுக்குப் பேசக்கூட தெம்பில்லாமல் சோம்பி இருக்கிறாள் என்று தெரிந்தவுடன் பாட்டியும் தண்ணீரோடு சேர்த்தே கூழ், கஞ்சியெனக் காய்ச்சி பிள்ளைக்கு ஊட்டி விடுவாள். பேத்தி ஓடியாடித் திரிகையில் எவ்வளவு சாப்பிடுவாள், காய்ச்சல் வந்த பின்பு இப்போது எவ்வளவு சாப்பிடுகிறாள் என்ற மனக் கணக்கை வைத்தே பாட்டியவள் எப்படியேனும் பேத்தியை ஏமாற்றி டம்ளரிலோ, சங்கிலோ, ஸ்பூன் வழியாகவோ ஊற்றி குடிக்க வைத்துவிடுவாள். காய்ச்சலுக்கென்றே ரசம் சோறு, இட்லி என்ற வகையறாக்களை பாட்டிகள் எப்போதும் கைவசம் வைத்திருப்பார்கள்.

இப்படியான பாட்டிமார்களின் வைத்தியம்தான் நவீனப்படுத்தப்பட்டு வெவ்வேறு வடிவங்களில் ஒவ்வொரு மருத்துவமாய் விரிந்து கிடக்கிறது. காய்ச்சலென்று வந்த குழந்தையை அன்பாய் பேசி அரவணைத்து உன் பேர் என்ன, உனக்கு என்ன செய்யுது என்று கருணையோடு குழந்தையுடன் பேசி வைத்தியம் பார்க்கிற நவீன மருத்துவர்கள் இன்று குறைந்துவிட்டனர். பாட்டிகளைப் போல கதைகளைச் சொல்லி, ஏமாற்றி, போங்கு காட்டிகூட வைத்தியம் செய்ய வேண்டாம், குறைந்தபட்சம் குழந்தைகளைப் பார்த்து இப்போதுள்ள மருத்துவர்கள் சிரிக்கவாவது செய்ய வேண்டாமா? தற்போது வேகமாக வளர்ந்து வருகிற மருத்துவச் சூழல் அவர்களையும் ஒரு இறுக்கமான வாழ்க்கைக்குள்ளாக தள்ளிவிட்டது. இயற்கையிலிருந்து தானே மனித அறிவு வளர்ந்தது. அத்தகைய இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்த பழங்குடிகளிடமிருந்தே இயற்கை சார் மரபு அறிவு விரிந்தது. அவர்களிடமிருந்த மூலிகைகள் பற்றிய அறிவினைத்தான் மேற்கத்தியவர்கள் எடுத்துக் கொண்டு போய் அதனை விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்கிறேன் என்று தனதாக்கிக் கொண்டனர். ஆக, நவீன மருத்துவம் என்பது எங்கோ திடீரென்று வானத்திலிருந்து பொத்தென்று விழுந்ததல்ல. அது இயற்கையிடமிருந்து பழங்குடிகளுக்கு, பழங்குடி மக்களிடமிருந்து அறிவியல் கண்டுபிடிப்புகளை தனதாக்கிக் கொண்ட கர்ப்பரேட்டுகளுக்கும் என்று இன்று கடத்தப்பட்டிருக்கிறது. ஆக, உண்மையில் மாற்று மருத்துவம், நவீன மருத்துவம் என்று பார்ப்பதைவிட நமக்கு கையில் கிடைத்திருக்கிற மருத்துவ விஞ்ஞானத்தை வைத்து எல்லா மருத்துவத்தையும் இன்னும் வளர்க்க வேண்டியிருக்கிறது.

காய்ச்சலென்று வருகின்ற பிள்ளைகளிடம் கேள்விகள் கேட்டு, பரிசோதித்து, வைத்தியம் செய்து முடிக்க மருத்துவர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக பத்து நிமிடங்களுக்குள்ளாகத்தான் செலவிடுகிறார்கள். ஒரு வாரம் வரை காய்ச்சல் நீடிக்கிற குழந்தைக்கு அந்த பத்து நிமிடங்களைத் தவிர ஏனைய நாட்களில் பெற்றோர்கள்தான் அதிக நேரம் செலவிடப் போகிறார்கள். அப்படியானால் குழந்தையை பரிசோதித்து மருந்துகள் கொடுக்கிறோம் என்பது ஒருபுறம் இருந்தாலும், காய்ச்சல் வந்த பிள்ளைகளை வீட்டில் வைத்து எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்துவதிலேதான் உண்மையான மருத்துவம் அதிகபட்சமாக செலவிட வேண்டியிருக்கிறது. ஆனால் வெளிநோயாளி பிரிவில் நோயாளிகளின் கூட்டம், மருத்துவர்கள் போதாமை போன்ற காரணங்களால் இது இன்றுமே சத்தியப்படாமல்தான் இருக்கிறது. காய்ச்சலென்றவுடன் பாட்டி கைவைத்து பார்க்கும் வித்தையைத்தான் மருத்துவமனையில் இன்று தெர்மாமீட்டர் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். தோலின் மீது கை வைத்து உடல்நிலையின் வெப்பத்தைப் பார்ப்பதற்கும் தெர்மாமீட்டர் வைத்து உள் மைய வெப்பநிலை அறிவதற்குமான வித்தியாசத்தை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆதலால்தான் வீட்டிலேயே ஒரு டிஜிட்டல் தெர்மாமீட்டரை வாங்கி வைத்துக் கொள்வது காய்ச்சலின் தீவிரத் தன்மையை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

காய்ச்சல் வீரியத்தைக் குறைக்க பாட்டி ஈரத்தண்ணீர் ஒத்தடம் கொடுத்து சரிகட்ட முயலுகிற அதே வேலையைத்தான் நவீன மருத்துவ அறிவியல் பாராசிட்டமால் மூலமாக குறைக்க முயலுகிறது. அதேசமயம் ஈரத்துணி ஒத்தடம் என்பது தோலின் வெப்பநிலையைத் தான் குறைக்கிறதே தவிர உள்மைய வெப்பநிலையை குறைக்க பாராசிட்டமால்தான் வேலை செய்கிறது என்பதையும் நாம் இப்போது புரிந்து கொள்கிறோம். அதேபோல உதடு, நாக்கு மற்றும் தோல் வறட்சி என்று பாட்டிகள் பார்த்துத் தெரிந்து கொள்கிற வழக்கத்தைத்தான் நவீன மருத்துவம் கண்களை உற்றுப் பார்த்து, உதடு மற்றும் நாக்கின் ஈரப்பதத்தை கவனித்து, எவ்வளவு தண்ணீர் குடித்தார்கள், எத்தனை முறை சிறுநீர் கழித்தார்கள், கடைசியாக எப்போது சிறுநீர் கழித்தார்கள் என்று ஒரு படிவம் போட்டும், எழுதி வைத்தும் நீர்ச்சத்தைக் கண்காணிக்கிறது. மேலும் இரத்த அழுத்தம் குறைவதை வைத்து நீர்ச்சத்து குறைவதை அளவிட்டும் பாட்டி செய்வதுபோல வாய் வழியாக தண்ணீரை குடிக்கச் செய்கிறார்கள். ஒருவேளை அந்த குழந்தை வாய் வழியே எதையும் குடிக்க முடியாத பட்சத்தில் சோர்வாகவோ அல்லது மயக்க நிலையிலேயோ இருந்தால் குளுக்கோஸை இரத்தம் வழியே ஏற்றச் சொல்கிறார்கள். அதேசமயம் குழந்தைகள் சாப்பிடாமல் இருந்தால் முடிந்த அளவிற்கு வாய் வழியே நீர்ச்சத்து பிடிப்பான உணவாகக் கொடுக்கச் சொல்வதும், அப்படி அவர்கள் குடிக்காமல் முரண்டு பிடித்தாலோ அல்லது வாந்தி எடுத்தாலோ குளுக்கோஸே தீர்வு என்று இரத்தக் குழாயில் குழாயைச் சொருகி குளுக்கோஸ் பாட்டிலை ஏற்றியும்விடுகிறார்கள்.

ஆக, எல்லாமே வைத்தியம்தான். ஆனால் என்னவொரு வித்தியாசம் என்றால், அன்று வீட்டில் பத்தியம் பார்த்தும்கூட நோய் சரியாகவில்லையெனில் இந்த நோய் நம்ம பக்குவத்திற்கு மட்டுப்படாது, இனி பெரியாஸ்பத்திரிக்கு கூப்பிட்டுப் போயிதான் வைத்தியம் பார்க்க வேண்டும் என்று வெளிப்படையாகவே சொல்லிவிடுவார்கள், அன்றைய மருத்துவச்சிகள். அவர்கள், வேறு மருத்துவரிடம் நாம் போகச் சொல்கிறோமே நம்மை அவர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, நாளைக்கு இதனால் நம்மிடம் வைத்தியம் பார்க்க வருபவர்கள் குறைந்து விடுவார்களோ என்றெல்லாம் அவர்கள் நினைத்து பயந்ததில்லை. ஏனெனில் அவர்கள் ஒரு வெற்றிலை பாக்குக்கு தானமாய் வைத்தியம் பார்த்தவர்கள். ஆதலால் காய்ச்சல் வந்த பிள்ளையை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு முன்னால் அவர்களுக்கு கஞ்சி வைத்து சாப்பிடக் கொடுத்து, தேவையான தண்ணீரை அருந்தச் சொல்லி அவசியமானால் கூடவே ஒரு தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு வரலாம். தாங்களாகவே மாத்திரை கடையில் வாங்கி போட்டுக் கொள்வதைவிட வீட்டிலேயே ஈரத்துணியை வைத்து துடைத்தெடுத்து காய்ச்சலின் வீரியத்தை மட்டுப்படுத்தலாம். இப்படி வீட்டளவிலான முதலுதவி எதையுமே செய்யாமல் வேகவேகமாக மருத்துவமனை கிளம்பி வந்து சிகிச்சை பெறுவதில் எந்த அர்த்தமுமில்லை. இதைத்தான் முதலுதவியாக நம்முடைய பாட்டிமார்கள் அன்று செய்து கொண்டிருந்தார்கள்.

-டாக்டர் இடங்கர் பாவலன்
idangarpavalan@gmail.com

;