headlines

img

பாஜக அரசுகளின் பிரிவினைச் சட்டம்...  

மத்தியப் பிரதேசத்தில் ‘லவ்ஜிகாத்’ சட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக அம்மாநில பாஜகஅரசு அறிவித்திருக்கிறது. இல்லாத ஒன்றை இருப்பதாக இட்டுக்கட்டி அதனை வைத்து மதவெறியையும், பிரிவினையும் உண்டாக்கும் சூழ்ச்சியை பாஜக அரசுகள் தற்போது  கையிலெடுத்திருக்கின்றன. 

லவ் ஜிகாத் என்பது வலதுசாரி மற்றும் சங்பரிவார் அமைப்புகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பமே ஆகும்.  தற்போது வரை லவ்ஜிகாத்என்ற வார்த்தையே இந்திய சட்டத்தில் கிடையாது. அதாவது ஒரு தனி நிதியை ஒதுக்கி, அதிலிருந்து சிலரை நியமித்து மாற்று மத பெண்களை காதலித்து திருமணம் செய்து கொள்ளசெய்கிறார்கள்; பின்னர் அவர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றத்தில் ஈடுபடுத்துகிறார்கள்; இதற்கு பெயர்தான் லவ்ஜிகாத் என ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் விளக்கம் கூறுகின்றனர்.  அதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.  ஒருவேளை ஒருவர் அப்படி கட்டாய மதமாற்றத்திற்கு  உட்படுத்தப்படுகிறார்  என்றால்அதனை தடுத்திட, தண்டித்திட ஏற்கனவே சட்டங்கள் இருக்கிறது. தனியாக எதற்கு சட்டம் ? 

மத்தியில் உள்ள மோடி தலைமையிலான அரசு ஏற்கனவே கேரள மாநிலத்தில் குறிப்பிட்ட11 மதக்கலப்பு திருமணங்களை லவ்ஜிகாத் என்றபெயரில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியது. அதுவும் தேசிய புலனாய்வு முகமையே விசாரித்தது. இறுதியில் லவ் ஜிகாத் என்று எந்ததிட்டமிட்ட ஏற்பாடும் இல்லை; இது கட்டமைக்கப்பட்ட பிம்பம் என என்ஐஏ அறிவித்தது. அதே விசாரணையின்  ஹதியா வழக்கில் உச்சநீதிமன்றம் 24 வயதான ஒருவர் தனது விருப்பத்திற்கேற்ப யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்; விரும்பிய மதத்தை பின்பற்றிக் கொள்ளலாம் என தீர்ப்பையும் வழங்கியிருக்கிறது.

மத்தியப் பிரதேச பாஜக அரசு அறிமுகப்படுத்தும்  லவ்ஜிகாத் சட்டத்தின் படி மதம் மாறி திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள்  ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டுமாம். அதே போல் இந்த சட்டத்தின் படி திருமணத்திற்கு உதவுபவர்களும் தண்டிக்கப்படுவார்களாம். ஆகஇவர்களின் நோக்கம் மதம் மாறி யாரும் திருமணம் செய்யக் கூடாது என்பதையே சட்டமாக கொண்டு வர முயற்சிக்கின்றனர். இந்த சட்டத்தைபயன்படுத்தி வேண்டாதவர்களை எளிதாக பழிவாங்க முடியும்.  இது இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் தனிநபர் உரிமைக்கும், மதவழிபாட்டு உரிமைக்கும் எதிரான நடவடிக்கைஆகும். மேலும் இது இந்து பெண்களை இழிவுபடுத்தும் செயல் ஆகும். நாட்டில் பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று,  வேலையின்மை, வறுமை, விலை உயர்வு  உள்ளிட்ட மக்களின்அடிப்படை பிரச்சனைகள் ஆயிரம் இருக்கிறது.அதற்கு தீர்வு காண்பதில் படுதோல்வியை தழுவியிருக்கும் மத்திய மோடி அரசும், மாநில பாஜக அரசுகளும் மக்களின் கவனத்தை திசைதிருப்பி வருகின்றன. ஆனால் எவ்வளவு காலத்திற்கு இப்படி திசை திருப்பிவிட முடியும்? 

;