headlines

img

ஆபத்தை அழைக்க வெற்றிலை பாக்கா?

கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைப்பதால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறி யுள்ளார். அணு மின்சாரம் குறித்தோ, அணுக் கழிவு ஏற்படுத்தக்கூடிய அழிவு குறித்தோ எவ்வித நிபுணத்துவமும் இல்லாத இவர் இவ்வாறு கூறி யிருப்பது தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை ஆதரிக்க வேண்டும் என்ற பாஜகவின் செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே ஆகும். எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை, மீத்தேன் திட்டம் என தமிழ்நாட்டிற்கு எதிரான, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக மட்டுமே கொண்டு வரப்படக்கூடிய திட்டங்களை பாஜக வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறது. இந்த லட்சணத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஆய்வு நடத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே அணுக் கழிவு மையம் அமைவதால் ஆபத்து இல்லை என்று கண்டு பிடித்ததாகவும் தமிழிசை கூறியுள்ளார்.

இதுகுறித்து உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழிசை, செல்ல வேண்டிய இடங்கள் ரஷ்யாவின் செர்னோபைல் மற்றும் ஜப்பானின் புகுஷிமா போன்ற இடங்கள்தான்.  ஜப்பானில் 2011ஆம் ஆண்டு புகுஷிமா அணுமின் நிலையத்தை நிலநடுக்கம் தாக்கிய போது, மிகப் பெரிய அளவில் கதிர்வீச்சு ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். இதற்கு காரணம் புகுஷிமா வில் அமைக்கப்பட்டிருந்த அணுசக்தி கழிவுகள் முறையாக பராமரிக்கப்படாதது தான் என்று கண்டறியப்பட்டது. இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென் றால் கூடங்குளம் அணுமின் உலைகளில் தேங்கும் அணுக்கழிவுகளை மட்டுமின்றி, இந்தி யாவின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 22 அணுமின் நிலையங்களில் தேங்கும் கழிவு களை கூடங்குளத்தில் கொண்டுவந்து சேமிக்க திட்டமிடுவதுதான். கர்நாடகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலை யில், அணுக்கழிவு அபாயத்தை ஏற்படுத்துவ தற்கு கூடங்குளத்தை தேர்வு செய்துள்ளனர்.

கூடங்குளத்தில் முதலாவது அணுமின் நிலையத்தோடு இத்திட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் இரண்டாவது, மூன்றாவது என அணு உலை பூங்கா அமைக்கக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அந்தப் பகுதி பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் வலி யுறுத்துகின்றன. கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடிய மீனவர்கள் உட்பட பொதுமக்கள் மீது பொய் வழக்கு போட்டு இழுத்தடிக்கப்படுகிறார்கள். இந்தநிலையில், அணுமின் கழிவுகளை கொண்டு வந்து கூடங்குளத்தில் சேமித்து வைக்கும் திட்டம் என்பது தென் மாவட்டங்க ளுக்கு ஆபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதற்கு சமமாகும். இந்த திட்டத்தை எதிர்த்து பெருமளவிலான போராட்டம் வெடித் தாக வேண்டும்.

;