headlines

img

கீழடியை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்

தமிழர்களின் சங்க காலம் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிற அரிய கண்டுபிடிப்பை கீழடி அகழாய்வு உலகிற்கு உணர்த்தியுள்ளது. தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட 4ஆம் கட்ட அகழாய்வு அறிக்கை, தமிழ் எழுத்து வடிவங்கள் கி.மு.6ஆம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது என்பதற்கு உரிய சாட்சியமாக அமைந்துள்ளது.  தமிழர்கள் இலக்கியத்திலும் எழுத்துக் கலையிலும் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே வல்லவர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதற்கு மறுக்கமுடியாத சான்றுகள் கிடைத் துள்ளன. இந்திய வரலாற்றையே இனி தமிழர் கள் வரலாற்றிலிருந்து தான் முன்னோக்கிப் பார்க்க வேண்டும் என்பதையும் கீழடி எடுத்துக் காட்டுகிறது.

கீழடியில், நான்காவது முறையாக நடத்தப்பட்ட அகழ்வாய்வின் கண்டுபிடிப்புகள், கரிம மாதிரிகள் உள்ளிட்டவை, அமெரிக்கா விலும் இத்தாலியிலும் உள்ள புகழ் வாய்ந்த சோதனை கூடங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில், வேளாண் தொழில்களில் காளைகள் மற்றும் விலங்குகளை தமிழர்கள் பயன்படுத்தி யுள்ளனர் என்பதை உறுதி செய்கின்றன. கீழடிக்குப் பிறகு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம் சனோவ்லி என்கிற இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைப் போல கீழடி அகழாய்வுப் பகுதியையும் பாது காக்கப்பட்ட இடமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும் பொருட்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இருக்கும் சென்னை மண்டல அலுவலகத்துடன் தென் தமிழ கத்திற்காக, மதுரையிலும், தொல்லியல் துறை அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். கீழடியில், அகழாய்வு பணிகள் துவக்கப்பட்ட அதே கால கட்டத்தில், குஜராத் மாநிலம் வாட் நகரிலும் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்ட நிலையில், அங்கு அருங்காட்சியகம் அமைக் கத் திட்டமிட்டுள்ளதைப் போல, கீழடியிலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை, பார்வைக்கு வைக்க அருங் காட்சியகம் அமைக்க வேண்டும். 

அதுமட்டுமல்ல, கீழடி மற்றும் அதை யொட்டியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. மொத்தம் 450 ஏக்கர் பரப்பில் 10 முக்கிய இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. தற்போதைய அக ழாய்வில் நவீன தொழில்நுட்பமும் பயன்படுத் தப்பட்டது. இந்நிலையில், கீழடி மட்டுமின்றி, 2019- 20ல் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் ஈரோடு மாவட்டம் கொடுமணல் ஆகிய இடங்களிலும் இதர சில மாவட்டங்களிலும் அக ழாய்வு பணிகளுக்கான திட்டங்களை தமிழக அரசின் தொல்லியல் துறை வகுத்துள்ளது. இந் நிலையில், கீழடி ஆய்வுகள் இவையனைத்துக் கும் உந்துசக்தியாக மாறியுள்ளது. தமிழகம் அதை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.

;