headlines

img

சமூக நீதியை நிலைநாட்ட கரம் கோர்த்துச் செயல்படுவோம்!

கேரளாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க  வைக்கம்  போராட்டத்தின்  நூற்றாண்டைத் தமிழகமும் கேரளாவும் இணைந்து கொண்டாட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நம்நாட்டில் சுய மரியாதை. சமூக நீதியை நிலை நாட்டிய போராட் டங்களில்  வைக்கம் போராட்டம் மிக முக்கிய மானது.

நாட்டில் நடந்த ஆலய நுழைவுப் போராட் டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக இந்தப் போராட்டம் திகழ்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் சம உரிமையைப் பெறுவதற்கான பாதையை இது காட்டியது.   கேரள  மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில்   உள்ள மகாதேவர்  கோயிலைச் சுற்றி அமைந்திருந்த தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடந்து கூடசெல்ல முடியாத அளவுக்கு  தீண்டாமை நிலவியது.

இந்த சமூகக்கொடுமையை எதிர்த்து  1924 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாள், கேரளத் தலைவர் டி.கே.மாதவன் என்பவரால் வைக்கம்  போராட்டம் தொடங்கப்பட்டது.  தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே,  அதில் கலந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.  இந்த தகவல் அறிந்து    காங்கிரஸ் கட்சியின் அன்றைய தலைவராக  இருந்த தந்தை பெரியார், வைக்கம்  சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை  ஏற்று  நடத்தினார். பல  நாட்கள் போராட்டக் காரர்களுடன் தங்கியிருந்து போராட்டத்தை ஒருங் கிணைத்தார். கைது, கடுங்காவல் என அன்றைய திருவாங்கூர் சமஸ்தான காவல்துறை அவரை மிக மோசமாக நடத்திய போதிலும் தீண்டாமைக்கு எதி ராக உறுதியாக நின்றார். இதற்காக அவர் பலமாத காலம் சிறைத்  தண்டனையை அனுபவித்தார்.

சிறையில் மற்றவர்கள் அனைவரும்  அரசியல் கைதிகள் போல நடத்தப்பட்டபோதிலும் தந்தை பெரியார் கைகளிலும் கால்களிலும்,  விலங்கு போடப்பட்டு, கழுத்தில் மரப்பட்டை   அணிவிக்கப் பட்டு  மோசமான குற்றவாளிபோல்   நடத்தப் பட்டார். மன்னர் ஆட்சியின் அடியாட்கள் மட்டு மல்லாது காவல்துறை, சிறைத்துறை அதிகாரிக ளின் கொடூரமான தாக்குதலையும் அவர் எதிர் கொள்ள நேரிட்டது.  இருந்தாலும் எதை கண்டும் அஞ்சாமல் தீண்டாமைக்கு எதிராக அவர் உறுதியாக நின்றதால் மன்னர் அடிபணிய நேரிட்டது.  இந்திய சமூக நீதி வரலாற்றில்  மறக்க முடியாத போராட்டம் இதுவாகும். 

மற்ற இடங்களில் நிலவிய தீண்டாமைக்கு எதி ராகப் போராட உந்துசக்தியாக இது திகழ்கிறது. வைக் கம் போராட்டம் நடந்து  100 ஆண்டுகள்  ஆனா லும் இன்னும் நாட்டில் தீண்டாமை முற்றிலும் ஒழிய வில்லை. பல வடிவங்களில் அது தொடர்கிறது. தீண்டாமையை முற்றிலும் ஒழித்துக்கட்ட சமூக நீதி களப்பணியாளர்களுக்கு  கலங்கரை விளக்க மாக  வைக்கம் போராட்டம்   வழிகாட்டுகிறது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த வைக்கம் போராட் டத்தின் நூற்றாண்டு  விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கேரள முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. சமூக நீதி, சுயமரியாதைக்கான போராட்டத்தில் தமிழக மும் கேரளாவும் இணைந்து பயணிப்பது வர லாற்றுக் கடமையாக மாறியுள்ளது.

;