headlines

img

அறிவிக்கப்படாத அவசர நிலைக் காலமா?

இந்தியாவில் அவசர நிலைக் காலம் பிறப்பிக்கப் பட்டதை நினைவு கூர்ந்து அந்த இருண்ட காலத்தை நாம் மறந்து விடக்கூடாது என்று நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்துள்ளார். இந்தியாவில் ஜனநாயகம் முடக்கப்பட்ட அவசரநிலைக் காலத்தை இந்திய மக்கள் மறந்துவிடக்கூடாது என்பது உண்மைதான்.ஆனால் இன்றைய பாஜக கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலைக்காலம் போல பல்வேறு ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டதையும், இந்திய மக்கள்  ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

1975 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று கொண்டு வரப்பட்ட அவசர நிலைக்காலம் 1977ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி வாபஸ் பெறப்பட்டது. அவசர நிலைக்காலத்தில் இந்திய அரசமைப்பில் 21ஆவது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனி மனித சுதந்திரம், குடி மக்களின் பாதுகாப்பு ஆகியவை கேள்விக்குள்ளானதோடு ஒவ்வொரு அரசமைப்பு நிறுவனங்களையும் நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. நீதித்துறையும் இதிலிருந்து தப்ப முடிய வில்லை. இதை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசி யுள்ள அவர், தன்னுடைய மனசாட்சியை நோக்கி சில கேள்விகளை எழுப்பிக் கொள்ள வேண்டும். உண்மையில் நீதித்துறையில் எத்தகைய தலை யீட்டை தன்னுடைய அதிகாரத்தின் கரங்கள் செய்து கொண்டிருக்கிறது என்பது அவருக்கு தெரியாதா? குஜராத்தில் மோடி - அமித்ஷா வகை யறாவின் ஆசியுடன் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் வேட்டையாடப் பட்டார்கள். அவர்களு க்கு நீதி கிடைக்க விடாமல் எத்தகைய தலையீடு கள் செய்யப்பட்டன என்பதை நாடறியும். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது நீதியின்பாற்பட்டது அல்ல. ஆனால் இதைக் காரணம் காட்டி சமூகப் போராளி டீஸ்டா செதல்வாத் மற்றும் அப்போதைய குஜராத் காவல் துறை தலைவர் ஸ்ரீகுமார் ஆகியோர் கைது  செய்யப்பட்டிருப்பது அவசர நிலைக் காலத்தையே நினைவுப்படுத்துகிறது.

மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை,  தேர்தல் ஆணையம் உட்பட அரசியல் சாசன அமைப்புகள் எந்தளவுக்கு இப்போதைய ஒன்றிய ஆட்சியில் சிதைக்கப்படுகின்றன என்பது கண் கூடாகத் தெரிகிறது. 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தேச பக்தர் களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட தேச விரோதச் சட்டம் இன்றைக்கு வரை எந்தளவுக்கு மோசமாகப் பின்பற்றப்படுகிறது, அரசை விமர்சிப்பவர்கள், எதிர்த்துப் போராடுபவர்கள் எவ்வளவு கொடூர மாக வேட்டையாடப்படுகிறார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்களைக் கூற முடியும். இது ஜனநாயக மாண்பை காக்கும் செயலா என்பதற்கு பிரதமரின் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.

அவசர நிலைக் காலத்தில் நாடாளுமன்ற ஜன நாயகம் முடக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் விரோதச் சட்டம் போன்றவை நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாகத் திணிக்கப் பட்டன. நாடாளுமன்றம் இயங்குவதால் மட்டும் ஜனநாயகம் முழுமையாக இயங்குகிறது என்று சொல்ல முடியாது. அவசர நிலைக் காலத்தின் நீட்சி யாகவே இன்றைய ஆட்சி உள்ளது என்பதுதான் உண்மை.

;