headlines

img

அத்துமீறும் அவசரச் சட்டம்

தேசியத் தலைநகர குடிமைப் பணி ஆணை யத்தை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளதன் மூலம் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை ஒன்றிய அரசு நீர்த்துப் போகச்  செய்துள்ளது. மேலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தில்லி மாநில அரசின் அதிகா ரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

தில்லியில் குடிமைப் பணி அதிகாரிகளை யார் கட்டுப்படுத்துவது என்று ஒன்றிய அர சுக்கும் தில்லி மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து சர்ச்சை எழுந்து வந்தது. துணை நிலை ஆளுநர் மூலம் தில்லி அரசின் அதிகா ரத்தை ஒன்றிய அரசு அபகரித்து வந்தது.

இதை எதிர்த்து தில்லி மாநில  ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தில்லிக்கு மாநில அந்தஸ்து இல்லையென்றா லும் சட்டம் இயற்றும் அதிகாரம் அம்மாநில சட்டமன்றத்திற்கு உள்ளது; ஜனநாயக நாட்டில் துணை நிலை ஆளுநரை விட மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும். குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப் படுத்தும் அதிகாரம் தில்லி அரசுக்கே உள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

நீண்ட நெடிய விசாரணைக்குப் பின்பே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பை ரத்து செய்யும் வகையில் ஒன்றிய அரசு அவச ரச் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இதன் படி தேசிய தலைநகர குடிமைப்பணி ஆணை யத்திற்கு தில்லி முதல்வர் தலைமை தாங்குவார் என்றும், ஆனால் நிர்வாகியாக துணை நிலை ஆளுநரே இருப்பார் என்றும் குடிமைப்பணி அதி காரிகள் நியமனம் மற்றும் பணி மாறுதல் விவகா ரத்தில் துணைநிலை ஆளுநரின் முடிவே இறுதி யானது என்றும், இந்த அவசரச் சட்டம் கூறு கிறது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இத்தகைய அவசரச் சட்டத்தை நிறைவேற்றி யுள்ளதன் மூலம் உச்சநீதிமன்றம் அங்கீகரித்த கூட்டாட்சித் தத்துவத்தை ஒன்றிய அரசு கேலிக் கூத்தாக்கியுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்பதை அர்த்தமிழக்கச் செய்து  ஒன்றிய அரசின் கைப்பாவையான துணை நிலை ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதன்மூலம் தில்லி அரசின் அதிகாரத்தை ஒன்றிய அரசு கைப்பற்றிக் கொள்ள முயல்கிறது. 

குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணி மாறுதல் ஒன்றிய அரசிடம் இருந்தால் மக்க ளால் தேர்வு செய்யப்பட்ட மாநில  அரசின் உத்தர வுகளுக்கு அவர்கள் கட்டுப்பட மாட்டார்கள். முடிந்தவரை முட்டுக் கட்டை போட்டு ஒன்றிய அரசுக்கு ஒத்திசைவாக நடந்து கொள்ளவே முயல்வார்கள். இதன் மூலம் நிர்வாக முடக்கம் ஏற்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்ட மன்றம் என்பது வெறும் அலங்கார சபையாகவே இருக்கும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து கொண்டே மறுபுறத்தில் அந்த தீர்ப்பை ஒன்றுமில்லாமல் செய்யும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியிருப்பது ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கையே காட்டுகிறது.