headlines

img

கருத்துரிமையை நசுக்கும் மோடி அரசு

அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய் யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3) இன் படி, ஒரு எம்.பி., ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். இந்த தண்ட னையை எதிர்த்து  அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.  தேவைப்பட்டால், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தையும் நாட முடியும்.

 ராகுல் காந்தி அவதூறாகப் பேசினார் என்று கூறி இரண்டு ஆண்டு தண்டனை விதித்திருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலா கும். நமது அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள நெறி முறையான ‘ஜனநாயகக் குடியரசு’ என்ற தத்து வத்தை ஆட்சியாளர்கள் நாசப்படுத்திவிட்ட னர். அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில்  கருத்துச் சுதந்திர உரிமை மிக முக்கியமானது.  ஜனநாயகத்தை வலுப்படுத்தி அதைப் பயன்படுத்தவேண்டுமே தவிர ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பதற்காக அல்ல.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு முழு வதும் படிப்படியாகக்  கருத்துரிமை  நசுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சித்தலைவர்களின் விமர்சனங்கள் மீது வழக்குத் தொடுக்கப்படுகிறது. ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து அல்லது பிரதமரை  எதிர்த்து யாராவது பேசினால் சி.பி.ஐ, வருமான வரித் துறை, அமலாக்கப் பிரிவை ஏவிவிடுகிறார்கள். நீதிபதிகளையே மிரட்டுகிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் கருத்தை, பதில் கருத்தால் ஆளுங்கட்சி எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அடக்குமுறை, அச்சுறுத்தல்களால் அல்ல.  ஜம்மு- காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்ததோடு அரசியல் கட்சித்தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்து ஒன்றிய அரசு  கொடுமைப்படுத்துகிறது.  

1977ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடியை பிரகடனப் படுத்தியபோது ஜனநாயகம் கசாப்பு  செய்யப் படுவதாக கூறியவர்கள் இன்றைய பாஜகவின் அன்றைய ஜனசங்கத்தினர். அவர்கள்தான் இன்று ஜனநாயகத்தை கூறுபோட்டு விற்கின்றனர். 

நரேந்திர மோடி அரசாங்கம் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளைச் சிதைத்து வருகிறது என்று பிரிட்டனில் ராகுல் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு பக்கம் கூச்சலிடுகிறார்கள். மறு பக்கம் நீதித்துறையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு  பொருத்தமான குறளை இந்த நேரத்தில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. ”இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்”.

;