headlines

img

மிரட்டலுக்கு அடி பணியாதீர்!

பாலியல் குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்கத் தயார் என்று வீரவசனம்பேசி வரும் பாஜக எம்.பி., பிரிஜ் பூஷண் சரண் சிங்கை பாதுகாக்க பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரான அவர் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு சர்வதேச மல்யுத்த சம்மே ளனம் இந்திய அரசுக்கு அழுத்தம் தந்தபோதும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் பாஜக எம்.பி., என்பதால் இதுவரை கைது செய்யப்படவில்லை. பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்துள்ள போதிலும் தீவிரமான விசாரணை நடத்தப்படவில்லை. இதனால் ஒன்றிய அரசின் மீது விளையாட்டு ஆர்வலர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 

இந்தியாவுக்கு சர்வதேச அளவில் பெயரையும் புகழையும் பெற்றுக்கொடுத்தவர்களுக்கு நீதி  கிடைக்க தேசிய அளவில் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்தியாவுக்கு 1983இல் உலகக்கோப்பையை  வென்று கொடுத்த கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான வீரர்களும் மல்யுத்த வீராங்க னைகளின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்டனர். இதன் தொடர்ச்சியாக விவசாயிகளும் போராட்டத்தில் குதித்தனர். தில்லி எல்லையை முற்றுகையிடுவோம் என்று அவர்கள் அறிவித்த பின்னர் ஒன்றிய விளை யாட்டுத்துறை அமைச்சரை அனுராக் சிங் தாக்கூர்,  போராடும்  மல்யுத்த வீராங்கனைகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அதில் பிரிஜ் பூஷணுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும், மல்யுத்த சம்மேளன தேர்தலும் இம்மாத இறுதிக்குள் நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. 

இந்தநிலையில் வழக்கம் போல் சாட்சிகளை பிறழ்சாட்சியாக மாற்றும் இழிவான வேலையில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். ‘’இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் எனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை’’ என, ஒரு இளம் மல்யுத்த வீராங்கனையின் தந்தையை மிரட்டி மாஜிஸ்திரேட் முன்பு சொல்ல வைத்துள்ளனர். ‘’எனக்கு பலரிடமிருந்து மிரட்டல்கள் வந்தன. அவர்கள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை” என்றும் “எனது மகளை போட்டியில் பங்கேற்க விடா மல் செய்து விட்டதால் குடும்பமே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது’’  என்றும் புகார்க ளைக்  கூறிய ஒருவர் திடீரென மாற்றிப் பேசுகிறார் என்றால் அவருக்கு யாரால்  என்ன நடந்திருக்கும் என்பதை விவரிக்க வேண்டியதில்லை.

சாட்சிகளை மிரட்டி பிறழ்சாட்சியாக மாற்று வதில் பாஜகவினர் கை தேர்ந்தவர்கள். குஜராத் கலவரம் தொடர்பான பல வழக்குகளில்  இதைத்தான் செய்தனர். இதனால் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தனர்.  பாஜகவினரின் அச்சுறுத்தலுக்கும் மிரட்ட லுக்கும் இடம் தராமல் மல்யுத்த வீராங்கனைகள் களத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து துணிச்ச லுடன்  போராட வேண்டும்.  அவர்களுக்கு ஆதரவாக இந்த நாடே இருக்கிறது.

;