headlines

img

தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி மீண்டும் பாஜக தலைமையிலான அரசு அமையவுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து தீவிரமான கேள்விகள் எழுந்துள்ளன. பொதுவாக தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்வது வழக்கம்தான் என்றாலும், இந்தமுறை பாஜகவின் தேர்தல் பிரிவு போலவே ஆணையம் செயல்பட்டது அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும். கடந்த பல்வேறு தருணங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்த அறிவிப்புகள் பாஜகவுக்கு ஆதரவாகவே அமைந்தன. மக்களவைத் தேர்தலில்தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைஎதையும் ஏற்கவில்லை. ஆனால் பாஜகவின் கட்டளைகளை சிரமேற்கொண்டு செயல்படுத்தியது. தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின் படிஅமைக்கப்படும் சுயேச்சையான அமைப்பு என்று கூறப்பட்டாலும் மத்திய ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்பவே ஆணையர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் பதவிக்காலத்தில் ஆளும் கட்சியின் விருப்பத்திற்கேற்பவே செயல்படுகிறார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடிநடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. அறிவியல்பூர்வமாக உருவாக்கப்பட்ட இயந்திரம் தவறு செய்யாது என்றாலும் அந்த இயந்திரத்தை கையில் வைத்திருப்பவர்கள் தவறு செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறிவிட முடியாது. தமிழ் நாட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வரப்பட்டது பெரும் சர்ச்சையை எழுப்பியது. மறுபுறத்தில் வடமாநிலங்களில் மளிகைக் கடைகளிலும் ஹோட்டல்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களின் மர்மம் என்ன என்பது குறித்து தெளிவான பதில் இல்லை.மேற்குவங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களில்  எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறைப்படி பிரச்சாரம் செய்வது கூட தடுக்கப்பட்டது. குறிப்பாக மேற்குவங்கத்தில் மத்திய ஆளும் கட்சியும் மாநில ஆளும்கட்சியும் மோதிக் கொள்வது போல காட்டிக் கொண்டாலும் இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் ஆதரவாளர்கள் இருதரப்பாலும் கடுமையாக தாக்கப்பட்டார்கள். திரிபுராவில் தேர்தலுக்கு பின்பு இடதுசாரிஆதரவாளர்கள் மீது மிகப்பெருமளவு கொலைவெறித்தாக்குதல் கட்டவிழ்த்துப்படப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தேர்தல் ஆணையர்களிடையே மோதல் ஏற்பட்டதும் மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படாத ஆணையர்கள் மிரட்டப்பட்டதும் நடந்தது. விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலான தேர்தல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த தேர்தல்களிலும் பாஜக கூட்டணி பெற்றுள்ள வாக்குகளுக்கும், இடங்களுக்குமிடையில் பெரும் வித்தியாசம் இருப்பதை உணர முடியும். தேர்தலில் பண ஆதிக்கத்தை தடுக்கவும், தனிநபர் ஆதிக்கத்தை குறைக்கவும், சமத்துவமான பிரதிநிதித்துவத்திற்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை உதவியாக இருக்கும். இது குறித்த விவாதம் தேசிய அளவில் நடக்க வேண்டிய நேரம் இது.

;