headlines

img

பாடம் புகட்டுவார்கள்!

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வரலாறு காணாத வன்முறையும் மோசடியும் நிகழ்ந்துள்ளது. அதைத் தடுக்கதேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கைஎடுக்கவில்லை. மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகளை குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைஒழித்துக்கட்டவேண்டும் என்ற நோக்கில் திரிணாமுல் காங்கிரசும், பாஜகவும் செயல்படுகின்றன. ஒருகாலத்தில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல் உள்ளிட்ட தேர்தல் மோசடிகளுக்கு பீகார் மாநிலத்தை உதாரணமாகக் காட்டுவார்கள். தற்போதுஅந்த இடத்தை மேற்குவங்கம் பிடித்திருக்கிறது. அம்மாநிலத்தின் ஆரோக்கியமான அரசியல் பாரம்பரியத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும்பாஜகவும் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது. தலைநகர் தில்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் கொல்கத்தாவில் ஒருவர் கூட தாக்கப்படவில்லை. அவர்கள் அனைவரையும் மகத்தான தலைவர் ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணி அரசு பாதுகாத்தது. மதச்சார்பற்ற தன்மைக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் பெயர்பெற்ற மேற்கு வங்கத்தில் இந்து- முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறது பாஜக. இத்தகைய போக்கு பேராபத்தில் முடியும் என்று இடதுசாரிக்கட்சிகள் எச்சரித்துள்ளன.

பாஜக தலைவர் அமித்ஷா, “அகதிகளாக அம்மாநிலத்திற்கு வந்துள்ள முஸ்லிம்கள் அனைவரையும் வங்கக்கடலில் தூக்கி எறிவேன்’’ என்று பகிரங்கமாகப் பேசுகிறார். இதைத் தேர்தல் ஆணையமும் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கிறது.வெளியில் பாஜகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் சண்டையிட்டுக்கொள்வதைப்போல் காட்டிக்கொண்டாலும் அவர்கள் இருவருக்கும் பொது எதிரி இடதுசாரிகள் தான். மம்தாவை ஆர்எஸ்எஸ் புகழ்வதும் “ஆர்எஸ்எஸ் தேசபக்தர்கள் நிறைந்த இயக்கம்’’ என்று மம்தாகூறுவதும் எதை உணர்த்துகிறது. “பாஜகவிலும்ஆர்எஸ்எஸ் இயக்கத்திலும் உள்ள அனைவருமே மோசமானவர்கள் அல்ல’’ என்று மம்தாகூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக எந்த ஒரு சமரசத்திற்கு இருகட்சிகளும்செல்லும். தேர்தல் முடிந்தவுடன் கூட்டுச் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.பாஜக தலைவர் அமித்ஷா கொல்கத்தாவில் நடத்திய ஊர்வலத்தில் வன்முறை நடந்துவிட்டது என்பதற்காக பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாக முடித்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது கண்டிக்கத்தக்கது. இந்தியதேர்தல் வரலாற்றில் இதுபோன்ற கட்டுப்பாடுகள்இதுவரை கேட்டிராத ஒன்று. வன்முறையைத் தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுக்காமல் ஜனநாயக ரீதியிலான பிரச்சாரத்தை முடக்கியது சரியல்ல. தேர்தல்ஆணையம், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் நாடகத்தை இனியும் நம்ப மக்கள் தயாராக இல்லை. அரசியலில் முதிர்ச்சி பெற்ற வங்கத்துமக்கள் இந்த கட்சிகளுக்கு சரியான பாடத்தை கற்றுக்கொடுப்பார்கள் என்பது நிச்சயம்.

;