headlines

img

எத்தனை காலம்தான்...

தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் மேகத்துக்கு குழாய் அமைப்போம் என்று சொல்வதுபோல மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு பற்றி பேசுகிறார். மக்களவைத் தேர்தலின்போது பேசியதையே தற்போதுகட்காரி தனது டுவிட்டர் பக்கத்திலும் கூறியுள்ளார். அதில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதுதான் தனது முதல் வேலை என்று அவர் கூறியிருப்பதாகவும், அதை பாராட்டி வரவேற்பதாகவும்நடிகர் சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.தனது பங்கிற்கு டாக்டர் ராமதாஸ் பாமகவின் கனவுத்திட்டமான இதை நிறைவேற்ற முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தமிழகத்தின்மீதான அமைச்சரின் இந்த அக்கறை பாராட்டத்தக்கது என்றும் கூறி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். அத்துடன் இந்தக் கோரிக்கை அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அவர் வைத்த பத்து கோரிக்கைகளில் மிக முக்கியமான கோரிக்கைஎன்றும் கூறியிருக்கிறார். 

அவரது மறைமுகமான ஒரே கோரிக்கைதனது மகனை தேர்தலில் வெற்றி பெறச் செய்வதும் எப்படியாவது அமைச்சராக்குவதும்தான். ஆனால் அதை நேரடியாக சொல்ல முடியாது என்பதால். மிக தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்தஅதிமுக ஆட்சியை பாராட்டி தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததாக கூறிக்கொண்டார். ஆனால் அதை மக்கள் நம்பவில்லை என்பது தேர்தல் முடிவின் மூலம் தெளிவானது.தமிழக முதல்வரும் துணை முதல்வரும் தேர்தல் பிரச்சாரத்தின் போதே பாஜகவின் காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டத்தை வரவேற்று பேசினர். இப்போது தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதி விவசாயத்திற்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில் காவிரி- கோதாவரி இணைப்புப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் கூறும் காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? தொடர்புடைய மாநிலங்கள் ஒப்புக்கொள்ளுமா? என்பதெல்லாம் கேள்விக்குறியது. கோதாவரி நதியின் உபரி நீரைகிருஷ்ணா நதி வழியாக காவிரிக்கு கொண்டு வந்து தமிழகத்திற்கு பயன்படுத்துவது காரியசாத்தியமானதுதானா? என்பது பற்றி யோசித்ததுபோல் தெரியவில்லை.

ஏற்கெனவே கிருஷ்ணா நதிநீரை கொண்டு வர போட்ட திட்டத்தால் சென்னை பயன்பெறவில்லை. வீராணம் தண்ணீரே உதவியது. காவிரி - வைகை - குண்டாறு - வைப்பாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மற்ற மாநிலங்களின் அனுமதியோ, உதவியோதேவையில்லை. ஆனால் அதை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அத்திக்கடவு -அவிநாசித் திட்டம் பற்றிதேர்தலில் பேசுவதோடு கூட கனவிலும், நினைப்பதில்லை. ஆனால் காவிரி தண்ணீர் பிரச்சனைஎழும்போதெல்லாம் கோதாவரி - காவிரி இணைப்பைப் பற்றி பேசி ஏமாற்ற முயற்சிக்கின்றனர் மத்திய, மாநில ஆட்சியாளர்கள். அவர்கள் இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்.

 

;