headlines

img

படிப்பினை

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநில முடிவுகள் வெளியாகியுள்ளன. தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதியிடமிருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடமிருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

இத்தேர்தல் முடிவுகள், மீண்டும் மீண்டும்  நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளும், உறுதியோடு ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளையும், ஒன்றிணைத்துச் செல்வதில் தங்களது வழக்கமான பிடிவாதங்க ளையும், கள நிலவரத்திற்கு மாறான முடிவுக ளையும் கைவிட்டு, ஒட்டு மொத்த வெற்றி என்பதையே இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்பதை இந்த முடிவுகள் அழுத்தம் திருத்தமாக உணர்த்தியுள்ளன.

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது பெரிய விசயமல்ல. பாஜகவு டன் நேரடி மோதல் நடந்த மற்ற மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கோட்டை விட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தானை எடுத்துக் கொள்ளலாம். ராஜஸ்தானில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் எந்தவித மான புரிந்துணர்வையும் ஏற்படுத்திக் கொள்ள காங்கிரஸ் தயாராக இருக்கவில்லை. இந்தப் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 18 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 14 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி பெற்ற வாக்குகள் தான் வெற்றி தோல்வியை தீர்மானித்துள்ளன. இன்னும் குறிப்பாக, காங்கிரஸ், பாஜக ஆகியவற்றைத் தொடர்ந்து  16 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே மூன்றாம் இடம் பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்ட 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 13,66,804. பாஜக பெற்ற வாக்குகள் 13,49,449. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள் 3,44,700. இந்த எண்ணிக்கையே, காங்கிரசின் தோல்விக்கு வாக்குகளை ஒருங்கிணைத்துக் கொள்ள அக்கட்சி தவறியதே காரணம் என்பதை உணர்த்துகிறது.

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை ஒரு படிப்பினையாக கொள்ள வேண்டும். அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளையும் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டுள்ள இந்தியா எனும் அணி சேர்க்கையே இன்றைய சூழலில் பாஜகவை வீழ்த்துவதற்கு மேலும் வலுப்படுத்த வேண்டிய ஒன்று. உடனடியாக  இந்தியா அணி சேர்க்கை ஒருமித்த குரலில் களமிறங்க வேண்டும்.