headlines

img

நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் தேசபக்த போராட்டம் வெல்க!

 நிலக்கரி சுரங்கத் தொழிலில் தனியார் நிறு வனங்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பை எதிர்த்து நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தம் முழுஅளவில் நடைபெற்று பெரும் வெற்றிபெற்றுள்ளது. நாட்டிலுள்ள பெரும்பாலான நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டியெடுப்பதும், வேறு இடங்களுக்கு அனுப்புவதும் முற்றாக தடைபட்டுள்ளது.  மோடி அரசு தம்முடைய முடிவை திரும்பப் பெற வில்லையென்றால் ஆகஸ்ட் 18-ஆம்  தேதி முதல் மீண்டும் முழுமையான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று தொழிற்சங்கங் கள் அறிவித்துள்ளன. இந்தியா முழுவதும் கொரோனா நோய்த் தொற்று மிகவேகமாக பரவிவருகிறது. இதை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக பொது முடக்க த்தை பயன்படுத்திக்கொண்டு நாட்டின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பதில்தான் மோடி அரசு முனைப்பாக உள்ளது.

பொருளாதார மீட்சிக்காக ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்ததோடு, இந்தியப் பொருளாதாரம் சுயசார்பு அடைவது முக்கியம் என்றார். பிரதமரின் அறிவிப்புக்கு விளக்கமளித்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிலக்கரி சுரங்கத்துறை முற்றிலும் தனியாருக்கு திறந்துவிடப்படுவதாகவும் யார்  வேண்டுமானாலும் சுரங்கங்களை ஏலம்  எடுத்து நிலக்கரியை வெட்டி பொதுச்சந்தை யில் விற்பனை செய்யலாம் என்றும் அறிவித் தார். நிலக்கரியை கொண்டுசெல்வதற்கான போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். நிலக்கரி சுரங்கத்துறையில் அரசின் ஏகபோக உரிமை தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமைபொங்க கூறிக் கொண்டார். பிரதமர் மோடியும் இதன் மூலம் போட்டி யும், வெளிப்படைத் தன்மையும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக தம்பட்டம் அடித்தார். “கோல் இந்தியா” லிமிடெட் எனும் அரசு நிறுவனம் உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறு வனமாகும்.

உலகளவில் நிலக்கரியின் மூலம் மின்சாரம் அதிகம் பெறும் நாடுகளில் இந்தியா விற்கு மூன்றாவது இடம். நிலக்கரியை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு இரண்டாமிடம். இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 54.2 சதவீதம் நிலக்கரியை சார்ந்துள்ளது.  இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நிலக்கரி சுரங்கத்துறையை முற்றிலும் தனியா ருக்கு தர மோடி அரசு முனைந்துள்ளது சுய சார்பிற்கான அடித்தளத்தையே தகர்ப்பதாகும்.  இந்தியாவின் மத்திய பகுதிகளில் 80 புதிய சுரங்கங்களை ஏலம் விட முடிவு செய்திருப்பதன் மூலம் சுற்றுச்சூழலும் மேலும் சீர்கேடடையும். இந்தத் துறையில் முன் அனுபவம் இல்லாத நிறுவனங்களும் கூட ஏலம் எடுக்கலாம் என்ற மோடி அரசின் அறிவிப்பு விநோதமானது. ஒரு புறம் தேசபக்த போலி வேடம்; மறுபுறத்தில் தேசவிரோத தனியார்மயம்.

;