headlines

img

விரக்தியால் எடுக்கப்பட்ட முடிவு

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது நாடாளுமன்ற தேர்தல் தோல்வி யால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது. அந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிகவும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி திமுக  தலைமையிலான இந்தியா கூட்டணி சரித்திரச் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததோடு பல  தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது. சில தொகுதிகளில் காப்புத் தொகையை இழந்துள்ளது. அந்தக் கூட்டணி யில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் பரிதாபகரமாக தோற்றுள்ள நிலையில்தான் இந்த முடிவை அதிமுக எடுத்துள்ளது.

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்ற கதையாக தேர்தல் ஜனநாயக முறையில் நடக்காது, நேர்மையாக நடக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கடந்த முறை தேனி தொகுதியில் அதிமுக வெற்றிபெற்ற நிலையில் இந்த முறை அந்த தொகுதியிலேயே டெபாசிட் இழந்துள்ளது. 2021 தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற்ற நிலையில், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பல தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகள் பாஜகவுக்கு சென்றுள்ளன என முதல்கட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடை யில் ரகசிய உடன்பாடு இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில்; விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக அணி சார்பில் பாமக போட்டியிடும் சூழலில் அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது பாஜக அணிக்கு ஆதரவான முடிவாகவே கருதப்படும்.

கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு அனைத்து வகையிலும் அதிமுக முட்டுக் கொடுத்தது. மோடி அரசு கொண்டு வந்த பல்வேறு மக்கள் விரோத, ஜனநாயக விரோத சட்டங்களுக்கு ஆதரவளித்தது. அதிமுக மற்றும்  பாமக கட்சிகள் மாநிலங்களவையில் ஆதர வளித்ததால்தான் குடிகெடுக்கும் குடியுரிமைச் சட்டத்தை மோடி அரசால் நிறைவேற்ற முடிந்தது. மேலும் நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் பாஜக ஆட்சியை அதிமுக பெருமளவு விமர்சிக்க வில்லை. பாஜகவுடன் சேர்ந்து பயணித்ததன் விளைவை நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அனுபவித்தது. இப்போது விரக்தியின் விளிம்புக்குச் சென்று விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்து பாஜக ஆதரவு நிலையை மறைமுகமாக எடுத்துள்ளதும் அந்தக்  கட்சியை மேலும் மேலும் சரிவை நோக்கியே உந்தித் தள்ளும்.

 

;