headlines

img

காலத்தின் கட்டளை

மத்திய அரசின் கீழ் இயங்கும் ‘நிதி ஆயோக்’ தொழிலாளர் நலச் சட்டங்களைத் தொழிலாளர் விரோத சட்டமாக மாற்றுவதற்குத் தேவையான ‘சீர்திருத்தங்களை’ அறிவித்திருக்கிறது. நாட்டில் இயங்கிவரும் 46 பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்குத் தாரைவார்த்திடவும் மிகவும் வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார், “அந்நிய முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி கொள்வதற்கான காரணங்கள் பல உண்டு” என்றும் “அந்நிய முதலீட்டாளர்களுக்கு அளிப்பதற்காக அரசாங்கம் இடம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது” என்றும் தெரிவித்திருக்கிறார். இவரது கூற்றை, அமெரிக்க கார்ப்பரேட்டு கள், புதிய இந்திய அரசாங்கம் தொழிலாளர் நலச்சட்டங்களில் நிலம் சம்பந்தமாகவும் மாற்றங்களைக் கொண்டுவர “துணிச்சலான சீர்திருத்தங்கள்” செய்திடவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பதுடன் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நாட்டில் தொழிலாளர்வர்க்கமும் விவசாயி களும் எதிர்க்கின்ற கொள்கைகளை மோடி-2 அரசாங்கம் முன்னிலும் மூர்க்கமான முறையில் பின்பற்றும் என்பது தெளிவாகி இருக்கிறது.தொழிலாளர் வர்க்கத்தை அடிமைகளாக்கக்கூடிய விதத்தில் தொழிலாளர்நலச் சட்டங்களில் சீர்குலைவுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அதேபோன்று மத்திய பொதுத்துறை நிறுவனங்களை, அரசாங்கம் தங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட்டுகளுக்குத்  தாரைவார்த்திடுவதன்மூலம் நாட்டின் சொத்துக் களைச் சூறையாடவும் வழிவகைகள் செய்யப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவை அனைத்தும் தங்களுக்கு வாக்களித்த மக்களின் வாழ்வாதாரங்களை மேலும் மிக மோசமான முறையில் பாதிக்கக் கூடிய விதத்தில் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. ஆட்சியாளர் கள் தங்களுக்குத் தாராளமாக நன்கொடை அளித்த, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளைக் குஷிப்படுத்தும் விதத்தில், தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களைச் சூறையாடிட இத்தகு நடவடிக்கைகளை எடுத்திட இருக்கிறது.  இத்தகைய பின்னணியில் மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய சம்மேளனங்களின் ஐக்கிய மேடையின் தலைமையின் கீழ் அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்றுபட்டு நின்று, மோடி-2 அரசாங்கத்தின் மக்கள் விரோத,தேச விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் என, தனது பொன்விழா துவக்கநிகழ்வில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)அறைகூவல் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் துவங்கி நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த தருணத்தில், சிஐடியு எனும் மாபெரும் இயக்கம் உதயமாகி பொன்விழா துவங்கியுள்ள இந்தத் தருணத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்திடவும், நாட்டில் தொழிலாளர் வர்க்கம் கடும் போராட்டங்கள் மூலமாக இதுவரை ஈட்டிய உரிமைகளைப் பாதுகாத்திடவும் மாபெரும் போராட்டங்களுக்குத் தொழிலாளர் வர்க்கம் தயாராக வேண்டும். காலம் நமக்கு இட்டிருக்கிற கட்டளை இது!

;