headlines

img

கல்வியைக் காப்பாற்ற  தமிழகம் கிளர்ந்தெழட்டும்...

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு என்பதுகுழப்பத்தையும், குளறுபடியையும் ஏற்படுத்தி அதன்மூலம் மோசடி செய்வதற்கே பயன்படுத்தப்படுகிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. பல லட்சம் மாணவர்கள் கல்விக்கனவோடு தொடர்புடைய இந்த தேர்வு முடிவைஎந்தளவுக்கு அலட்சியமாக வெளியிடுகிறார்கள் என்பது திரிபுராவில் தேர்வு எழுதிய மாணவர்களை விட பலமடங்கு அதிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது அரசுப்பள்ளியில், தமிழ் வழியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ்படிக்கும் மாணவர்கள்தான். பாஜகவினராலும், ஊடகத்தினராலும் பெருமளவு முன்னிறுத்தப்படுகிற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் ஜீவத்குமார் தேர்ச்சி பெற்றுள்ளதும் நாமக்கல் பாணி தனியார் பயிற்சி மையத்தில்படித்ததன் காரணமாகத்தான். அவரது குடும்பம்பெருமளவு கடன் வாங்கியும், பலரது உதவியைபெற்றும்தான் அந்த மாணவர் தேர்வு பெற்றுள்ளார். இது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றல்ல.

இந்த பின்னணியில் அரசுப்பள்ளியில் படித்தமாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில்  7.5 சதவீதம்இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுப்பதன் மூலம் மத்திய அரசின் கைக் கருவியாகவே அவர் செயல்படுகிறார் என்பது தெளிவு. மேலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்கவும், மத்திய பாஜககூட்டணி அரசு மறுக்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் கூட இந்தாண்டு சாத்தியமில்லை என சண்டித்தனம் செய்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்பில் கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதையும் மத்திய அரசு மறுக்கிறது. இது சமூக நீதியை முற்றிலும் மறுக்கும் அநீதியாகும். மருத்துவப் படிப்பை முழுக்க முழுக்க தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சதி வேலையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மதிப்புமிக்க அண்ணா பல்கலைக்கழகத்தை சொந்த நிதியில் நடத்திக் கொள்ள முடியும் என்றுஅப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம்எழுதியிருப்பது மாநில சுயாட்சியை மறுக்கும்செயல் மட்டுமல்ல, அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தவும், சமூக நீதியை மறுக்கவும் செய்யப்படும் அப்பட்டமான முயற்சியாகும். 

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை உறுதி செய்யக் கோரியும், சூரப்பாவை பதவிநீக்கம் செய்யக் கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று ஆளுநர் மாளிகை முன்பும், மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறவுள்ள எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தின் போர்க்குரலாகும். இதற்கு அனைத்துப் பகுதி மக்களும் பேராதரவு தர வேண்டும். 

;