headlines

img

இடஒதுக்கீட்டில் அரங்கேறும் அநீதி

பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வித் துறையை குறிப்பாக உயர்கல்வித்துறையை மத்திய பாஜக கூட்டணி அரசு கொஞ்சம் கொஞ்ச மாக மத்திய பட்டியலுக்கு மாற்றி வருகிறது. புதிய கல்விக்கொள்கை என்கிற பெயரில் கல்வித் துறை தொடர்புடைய அனைத்து முடிவுகளும் மத்திய அரசினால் எடுக்கப்பட அதை நடை முறைப்படுத்துகிற பணியை மட்டுமே இனி மாநில அரசுகள் செய்ய முடியும் என்ற நிலை உருவாக்கப்படுகிறது.  இது மிகவும் ஆபத்தான ஒன்று. பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு என்பது ஒழிக்கப்படும் நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.

இதற்கு ஓர் உதாரணமாக மருத்துவக்கல்வி பட்டமேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான  அநீதியை குறிப்பிடலாம். 2020ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய தொகுப்புக் குரிய இடங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கலந்தாய்வுக்குழு அறிவித்துள்ளது.

இதில் உள்ள 9,550 இடங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு 371 இடங்களே கிடைத்துள்ளன. அதாவது பிற்படுத்தப்பட்டோருக்கு 3.8சதவீத இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன.

மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை மாநிலங்களிடமிருந்து மத்திய அரசு பெறுகிறது. ஆனால் பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீடு இதில் பின்பற்றப் படுவதில்லை. உதாரணமாக தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் 1758. இதில் 50சதவீத இடங்களை அதாவது 879 இடங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ள நிலையில் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, மத்திய அரசு பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்கியுள்ள 27.5 சதவீத இடங்க ளும் கூட ஒதுக்கப்படுவதில்லை என்பது அநீதி யிலும் அநீதியாகும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மண்டல்குழு பரிந்துரை அடிப்படையில் ஏற்றுக்கொண்ட இடங்களைக் கூட பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க மத்திய அரசு மறுக்கிறது. இதுகுறித்து கேட்டால் இடஒதுக்கீடு பொருந்தாது என்கி றார்கள். ஆனால் கடந்த ஆண்டு மோடி அரசு கொண்டுவந்த பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கான 10சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி 653 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மத்திய அரசின் அநீதியால் 2017ல் 3101 இடங்க ளையும் 2018ல் 2429 இடங்களையும் பிற்படுத்தப் பட்டவர்கள் இழந்துள்ளனர். இந்த ஆண்டும் அதே அணுகுமுறை தொடர்வதால்  சுமார் 10ஆயிரம் இடங்களை பிற்படுத்தப்பட்டோர் இழந்துள்ளனர்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. பல்வேறு எதிர்க்கட்சி கள் மோடி அரசின் அநீதியை கடுமையாக எதிர்த் துள்ளன. ஆனால் மருத்துவ உயர்கல்வியில் சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மறுப்பது தொடர்கிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது தமிழக மாணவர்களும்தான். இந்த அநீதியை முறியடிக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?

;